Wednesday, 2 July 2014

அன்பே இன்பத்தின் வழி

சினம் எழவே  தீமை போக்கும் சக்தி - எங்கள்
சிந்தையெலாம் கொண்டதவள் சக்தி
மனம் மெழுகா யாக்குவதும் சக்தி  - அந்த
மாய விநோதங் களவள் யுக்தி
கனமெழுந்து கொள்ளும் இட்ட சக்தி-  எம்மில்
காட்டுமன்பு தெய்வ இறைபக்தி
தினமெழுந்து வேண்டுவது  சித்தி - அதைத்
தேடுவதில் மனம்பெறுமாம் சுத்தி

எழுவதுவும் விழுவதுவும் அவளால்  - ஆயின்
எண்ணும்  மனம் கொள்வதென்ன நிகழ்வால்
அழுவதுவும் சிரிப்பதுவும்  அருளால் - அன்னை
ஆக்கத்திலே வாழ்வுகாணும் திருநாள்
உழுதமகன் உண்பதென தருவாள் - இல்லை
ஓய்ந்து கிடந்தால் முழுதும் கரிநாள்
பழுத்தகனி கசக்குதெனில் பழமா - குற்றம்
பறித்தவனின் கரமெடுத்த தவறா?

இருந்த விடின்  உயிர் உடலின்  சேர்க்கை - பின் 
இருப்பதென்ன உடன் கருகும் யாக்கை
இருபதிலோ இரண்டு தசம் காணும் - உள்ளம்
இருப்பதிலே பொய்யில் மெய்யைக் காணும்
இருபதிலோ இல்லை இந்தக்கேள்வி - தானும்
இருபதியை விட்ட பின்னர் ஆவி      
இருளினுறை வானின் சக்திதேவி  -அதில்
இணைவதுண்டோ நானறியாப் பாவி

கரும்பினிலே அடி இனிக்கும் என்றார் - வாழ்வில்
காணும் சுகம் அடியிலன்று அன்பால்
அருவமெனும் உருவமற்ற  இறைவன் - தந்த
அழகியதோர் உணர்வு கொண்டு நிறைவான்
துருவம் இரண்டு கொண்ட திந்த பூமி - அதில்
துடி துடித் து ஓடும் வகை நீங்கி
அருகிருந்து ஆக்குமெண்ணம்  கொண்டு அன்பில்
ஆடிப்பாடு தோன்று இன்பம்நூறு

No comments:

Post a Comment