Sunday, 6 July 2014

பெண்களும் ஈழமும்


மனமோடி விளையாடத் தமிழோடு இசைபாடி
மகிழ்வோடு வாழ்ந்திருந் தோம்
கனமாகிப் படுநெஞ்சம் கலிகாண விதிகூடிக்
கவலைகொண் டஞ்சுகின் றோம்
தனமோடித் தொலைந்தாலும் தலைபோகும் நிலைவிட்டுத்
தவிப்பின்றி யமைதிகாண
இனமெங்கள் தமிழ்பேசும் ஈழத்து மாந்தரிவர்
இன்பத்தைக் காண்பதெப்போ

தினமோடி யெழுஞ் சூர்யன் தீயென்று சுட்டாலும்
திகழ் வாழ்வின் உயிர் ஊட்டமே
மனமோடி பகைவன் கை மறந்தே கைக்கொண்டாலும்
மதிகொண்டு செயும்காலையில்
சினந்தோடித் தவறென்னும் செய்குற்றம் பிழைதன்னைச் 
செய்வோனை அறம்வேண்டிடில்
கனவுகாண் குடிமக்கள்காத்திட்ட கடவுளிவர்
கருணை குரு எனவாழ்த்துமே

உயிரோடிப் படுந்துன்பம் உறவென்ற நிலைமாறி
ஒரு வாசலொளி தோன்றுமா
பயிரோடி வி|ளைகின்ற பாங்காக எம் வாழ்வும்
பயமின்றிச் சுகம் காணுமா
மயிலோடி நடமாட முகிலோடி நீர்தூற 
மலர்மீது தழுவுங் காற்றாய்
சுயமாகத் திரிகின்ற  நிலைகொண்டு பரந்தோடும்
சுதந்திரந் தனைக் கொள்வமா

       (அழகிய வாழ்வு )

சுனைநீரின் அலையாடச் சுருள்கூந்தல் அலைபோலும்
துவண்டோட எழில் பூத்திடும்        
தனை நீருள் மறைந்தாடும் தாமரைகள் பூமகளிர்
திருவதன அழகேந்திடும்
கனிவாழை நினைவூட்டக் காணுமா துளை பழமும்
கனிந்து வெடித்தான தோற்றம்
பனி காற்றிற் நடுவேயோர் பருவத்து இளமங்கை
பார்த்து நகை பூத்ததாகும்      
 
பூதாவி வண்டோடப் பூவையவள் விழியோடிப்
போவதெங் கென்றுபார்க்க
போதாது விரையென்ற பிரம்பாட நடைகாளை
பூட்டிய ச தங்கை யொலியும்
தாதா தெய் என்றாடும் தமிழ்மங்கை போலாக
தருமாவின் கனி பெண்ணவள்
காதோரம் படர்கன்னம் கன்றிச் சிவந்ததெனக்
கிளி நின்று தடுமாறிடும்

எழிலோடிப் பொலிகின்ற இன்பவாழ் விதுபோலும்
ஈழத்தில் பெண்டிர்காண
தொழிலே வன்கொலையாகித் தினந்தோறும் புரிகின்ற
தீந்தமிழ் எதிரிதானும் 
குழல்சூடும் மலர்மங்கை கொடியாகிப் படர்கின்ற
குடும்பத்தின் ஆணிவேரை
முழுதாயும் வேர்வெட்டி முற்றாக வீழ்த்தும் விதம்   
முடிவாகிப்  போவதெப்போ?

No comments:

Post a Comment