Sunday, 6 July 2014

ஏன் படைத்தாய்

வானக்குடை விரித்தாய் வண்ண ஒளித்தீயமைத்தாய்
தானப் புவி சுழல்வில் தண்மைகொளக் கடலமைத்தாய்
கூனம்புலி வானில் குறையவளர் கோலமிட்டாய்
தேனம் மலரிடையில் தித்திக்கக் செய்தாய் பின் 

கானக் குயில் படைத்தாய் காற்றிலிசை கூடவைத்தாய்
மானும் படைத்துவிழி மருளுமெழில் மென்மையிட்டாய்
தானமென்றெம் வாழ்வைத் தந்தாய் தருப் பொலியும் 
கானகம் படைத்தேனே  காண்விலங்கு நாட்டிலிட்டாய்

தீயும் சுடு வெயிலும் துள்ளும் மீன் வாழ்சுனையும் 
மேயும் பசு பச்சைநிலம் மேவியெழும் பட்சியினம்
நீயும் செய்தாய் தென்றல் நிற்கா தலையவிட்டாய்
ஆயுதமும் கையேந்தி அறமழிப்போர் ஏன் படைத்தாய்

வாயும் இனித்துண்ண வகை பலதும் கனிபடைத்தே
பாயும் நதி மீன்கள் பசும்புல்லில் பாய் விரித்தாய் 
காயும்நில வொளியில் காதல் மனம் உருகவைத்து
நோயும் பிடித்த உளம் நின்றவரைச் சிதைக்க விட்டாய்   

மாநிலமாம் மேதினியில் மக்கள் தொகை படைத்தே
மேனிநிறம் பலதாக்கி மேன்மை இன வெறியூட்டி
போநீ இடம் விட்டுப் புலம்பித்தான் திரியென்றே
ஏனிதயத் துள்ளேஇவ் விரக்கமிலா வெறுப்பீந்தாய்

மேனியெழில் சிலையாக்கி மின்னுவகை மெருகேற்றி
ஏனிந்த மாதர்வர இளமைதனில் எழுச்சியுற்று
வாநீ என அழைக்கும் வண்ணவிழி கண்டதன் பின்
சாநீ எனக்கொல்லும்  சஞ்சலத்தில் ஆழவிட்டாய்

ஆநீ செய் அகிலமதில்  அழகு மலர்ப் பூஞ்சோலை
தேனிலங்கு பூம்பொய்கை திரியுமிளம் பூங்காற்று
வானிடையே திரிமுகிலும் வண்ண ஒளி இசைநாதம்
வேனிற் குடைவானத் தெரிவெயிலால் விரி கமலம்

நாணக் குறும்பார்வை நயனமதிற் பொய்க்கோபம்
கோணற் குவியிதழும் கொட்டியதோர் குங்குமமாய்
பேணர் கரியதெனும் பெண்மைதனும் நீபடைத்து
ஆணிற் கொடியவரால் அணைத்து முயிர் சாகவிட்டாய்

சூது பகை வஞ்சமுடன் சினங்கொண்ட சூழ்ச்சிமயம்
மாதுன்பம் மயங் கியொரு மரணத்தின் மூச்சிழுக்க
காதும்தான் கேட்டிழியும் காதகரின் கொச்சை மொழி
யாதும் இவர்க்கென்றே எம்வாழ்வில் ஏன் இணைத்தாய்

தாயும் படைத்தாயத் தாயுதரத் துள் கருவாய்
சேயும் படைத்தாய் பின்  சேருடலும் பிரித்தழுதும்’
மாயும் வகைசெய்து மனமழவும் செய்தவளே
போயுமிவ் வாழ்வுதனைப் பூமியிலே ஏன் படைத்தாய்

No comments:

Post a Comment