Sunday, 6 July 2014

நம்பிக்கை வானில் உதிக்கிறது

நான் நடக்கும் பாதையெங்கும் நல்லொளித் தோற்றம் - அதில்
நர்த்தனஞ்செய் ஏந்திழையர் நிகர் சிலையாட்டம்
தேன்குரலில் பாடுமிசை தென்றலில் சேரும் -அந்தத்
தீந்தமிழின் ராகமழை தித்திப்பை யூற்றும் 
கானகத்து நீள்மரங்கள் காற்றினிலாடும் - என்
கால்நடக்கப் பூஇறைத்துக் களிமிகுந்தாடும் 
தேன் சுவைக்கப் பழுத்தபலா  தீஞ்சுளை கொள்ளும் - என்
தேவை பசிநீக்கவெனத் தாழ்ந்தடி தூங்கும்  

வான் தெளித்த நீர்சரங்கள் வந்தெனில் வீழும் - அவை
வாடிமனம் சோர்ந்துவிடா வந்தெனை நீவும்
ஏன் நடந்தகால் அடடா இம்சையில் நோகும் -  என
ஏற்றமலர் பூம்படுக்கை இயற்கை யுண்டாக்கும்
மேன்மைகொண்ட  தமிழிசையின் மெல்லிய ராகம் - அது
மேளதாள ஒலியெடுத்து மின்னிசை கூட்டும்
தான்நடந்த அன்னநடைத் தண்ணிலவாளும் - ஒளி
தாவிவழி மூடுமிருள்  தன்மையைப் போக்கும்

கண் நிறைந்த காட்சிகொண்ட கற்பனை ஊற்றில் - பெரும்
கரைபுரண்டு துள்ளும்நதி கால் தொடக் காணும்
மண்ணுருண்ட பூமிபசும் மரகத புல்லில் - நல்ல
மகிழ்வெடுக்கப் பாய்விரித்து மலர்களைத் தூவும்
எண்ணி யெதென் தேவையென இயம்பிடமுன்னே - என்
இமைவிழிக்க முன்னெழுந்தும்  என்கரம்சேரும் 
தண்மைகொள்ளும் அலையெனவே தரைபடவீழும் வாழ்வு
தாங்கும் திரை ஓங்கியெழும் தன்மையில் ஓங்கும்

பொன் ஒதுக்கும் மனமறியாப் பூவையர் கூடி - மனம்
போதைகொளும் புன்சிரிப்பில் பிறந்திடும் மாயம்
புன்மை நாசம் பேரழிவுப் போக்குகளற்றே - ஓர்
புத்துலகச் சூழலிலே பிறந்திடும் வாழ்வில்
அன்பு கொண்ட நெஞ்சமொன்று அன்னியமற்றே - எந்தன்
அன்னைபோலும் பக்கமிருந் தணைத்திடக் காணும்
பன்மையாகப் பரவசமும் பாதியென்றாகும் துயர்
பனிபடர்ந்த வேளை கதிர் படும் நிலையாகும்

No comments:

Post a Comment