Thursday, 13 March 2014

கடவுள்

கடவுளைத்தேடும் உள்ளங்கள் மீதே
கடவுள் இருக்கின்றான்
கருவினில் தோன்றி கருகிடும் வரையும்
கலந்தே இருக்கின்றான்
உடலின்காணும்  ஒவ்வொரு திசுவில்
உயிராய்த் துடிக்கின்றான்
உள்ளத்தினுள்ளே  உன்னத ஒளியாய்
ஓங்கி மிளிர் கின்றான்

இடமென எதுவும் இறைவனுக்கில்லை
 எங்கும் இருகின்றான்
இருப்பது ஏனோ எம்முள் இதனை
ஏற்றிட மனமில்லை
கடப்பது ஞானம் கருவினுள் வாசம்
கடவுள்   என்றாகும்
கடவுள் காணின் கட உள் கண்டால்
கருத்துகள் நிறைவாகும்

நடையினிலாடும்  நம்முடை தேக
நெளிவில் அசைகின்றான்
நடமதைப் புரிவோன் நரம்பினில்  கீதம்
நாவொலி ஆகின்றான்
தடம் புரள்வின்றித் தருமத்தை ஓதும்
தண்ணொலி நாதமெனும்
விடையறு கேள்வி விரவிடும்சப்தம்
விந்தையில் கலக்கின்றான்

நடந்திடும்போதில் உயர்ந்திடும் உதிர
நிறைவினில் உறைகின்றான்
கடந்த எம்வாழ்வின் காரணமானான்
காரிய மினியாவன்
கிடந்திடும்போது  கிறங்கிடும் மனதில் 
கேளிக்கை புரிகின்றான்
கேட்பது கொண்டே  கிளர்ச்சியைத் தந்து
கீழ்மையில்  சிரிக்கின்றான்

உயர்வதும் அவனால் தாழ்வதும் அவனால்
உலகதும் அவனாலே
தயவொடு சினமும் தரும் மகிழ்வுணர்வும்
தரணியில் அவனாலே
கயமையின் அழிவு கடமை நல்நீதி
காப்பதும்  அவன்தானே
நியதியும் அவனே நிகழ்வுகள் அவனே
நேர்ந்திடும்  முடிவவனே

நினைப்பதோ ஒன்று நடப்ப தின்னொன்று 
நியதிகொள் உலகமய்யா
நினைந்துளம் ஆற்றும் நிகழ்வுகள் திரிந்தே
நடந்திடும் நேரிலய்யா
வினை செயல் நாமே  எனநினைந்தெம்மை 
வேறிடத் துடித்தாலும்
வனைந்திடும் பானை வடிவது அவனே 
வகுப்பது முரணாகும்

எண்ணங்கள் மீது  இழைபவ னவனே
எதிலும் அவனய்யா
கண்ணிடை தோன்றும் காட்சியின் கர்த்தா
காரணம் கடவுளய்யா
வண்ணங்கள் கொண்டு வரைந்திடு மெங்கள்
வாழ்க்’கை’ என்றாலும்
எண்ணங்கள் கொள்ளும் இருப்பின் கருவோ
இறைவன் எனவாகும்

பிறப்பதுமில்லை பிரிவதுமில்லை
பிறிதென ஏதுமில்லை
இறப்பதில் முடிவாய் இருப்பதுமில்லை
இயற்கையின் சுழற்சிவகை
திறப்பதுமில்லை மூடுவதில்லை
திக்கில் எட்டும் நிறை
நிறமெனும் உருவம் இறைவனுக்கில்லை
நிர்மலசக்தி  நிலை

*

Saturday, 8 March 2014

கரம் கோர்ப்போம


ஓடிநடந்து மென்ன செல்லமே செல்லம் - தினம்
உண்டுங் களித்துமென்ன சொல்லடி செல்லம் - ஒரு
ஆடிவந்தான பின்னர்  ஆவணி வரும் - எங்கள்
அன்னை நிலத்தில் என்றும் துன்பமே வரம்- இன்பம்
தேடிநடந்துமென்ன  பாரடி செல்லம்  - எங்கள்
திக்கில் இருளடர்ந்த பேய்களின் வாசம் - வந்த
பேடி பிறத்தியர்கள் கொண்டனர் நிலம் -நெஞ்சு
பித்துப் பிடித்தழிந்தோம், கொஞ்சமோ வஞ்சம்

நாடிபிடித்து மென்ன தங்கமே தங்கம் - அவர்
நாளை பிழைப்பரென்று சொன்ன சாத்திரம் - இங்கு
ஓடி நிலம்பறிக்கும் புல்லரின் கரம் - எங்கள்
ஓசை  வழியிறுக்க கொள்ளுமோ உரம் - இவர்
கோடி உழைத்து மென்ன தங்கமே தங்கம் -  உயர்
கோபுரக்கள் சுற்றியென்ன  தங்கமே தங்கம் - இங்கு
கூடி உழைத்து உண்ட நெல்வயல் நிலம் - நாமும்
கொண்டோர் பொருள் கவர்ந்து போயினர்எல்லாம்
\
மாடி மனைகள் கட்டி வாழுவர் செல்லம் - உயர்
மன்னர் குலத்தரென்று பேசுவர் தம்மை- கொடும்
பேடி மனத்தரிவர்  செய்யும் இழிமை இந்தப்
பூமி பொறுத்தேனோ பொய்மை வாழவும் - உண்மை
மூடி மறைக்க வில்லை செல்லமே செல்லம்  - ஒரு
மூடர் இருக்கும்  இனம்  சொல்லவா செ ல்லம் - என்றும்
ஓடி ஒருகுலமென் றாவது மில்லை - அவர்
உய்யும் வழி இடையில் தோன்றலுமில்லை

வாடி நடந்துவழி  காணுவோம்  தங்கம் - எங்கள்
வம்சம் எடுக்கும் வீரம் வெல்லது திண்ணம் - அந்தச்
சூடிப்பிறை யுடையோன் கொண்டவள் நெஞ்சம் - வந்து
சுட்ட உதிரம் வலு ஊட்டுவள் இன்னும் -இனித்
தாடி உனது கரம் தங்கமே தங்கம் - நாங்கள்
தன்னந் தனியே இல்லை தங்கமே தங்கம் -வரை
கோடிஎன இழந்தும்  உள்ளவர்  சேரின் - இங்கு
கொள்ளும்  துயர் மறையக்  காணுவோம்  தேசம்

நான் என் செய்தேன்?


பிறந்தேன் வளர்ந்தேன் பெரிதென் றின்பம்
 பெற்றே னல்லேன் இதுதான் நல்
அறம் தேன் எனவும் அறியாதேனோ
 அகத்தென் இருளைக் கொண்டேன் நான்
சிறந்தேன் பருவம் இளந்தென் புடைத்தேன்
 செழித்தேன் எழுந்தே சிரித்தேன் அப்
புறந்தேன் கொள்ளும் புன்னகை கண்டேன்
   பொய்த்தேன் அவளுள் புகுந்தேன் ஏன்

மறந்தேன் என்னை மலரின் தேனை
 மதுவை யுண்ணும் வண்டானேன்
துறந்தேன் தேசம் துடித்தேன் அரண்டேன்
 துணிவை மட்டும் கொள்ளாதென்
பறந்தேன் உயிர்கள் பிரிந்தென் றாகிப்
  பரந்தென் இனமும் அழிந்தேகாண்
இறந்தே னென்போர் இழப்பைக் கண்டும்
 இருந்தேன் ஏதும் செயலற்றேன்

நறுந்தேன் உலகில் நடந்தேன் நலிவை
 நாளும்கண்டேன்  நினைவெல்லாம்
அறுந்தென் எண்ணம் அழிவென்றாக
   அடைந்தேன் பிணியும், தமிழன்னை
குறுந்தேன் கவிதை கொள்ளென் றாள் நான்
 குளிர்மை கொண்டேன் கலைபோற்றிப்
பொறுத்தே னன்றிப் புரிந்தேன் கடமை
 புகழ்ந்தேன் தாயே சக்திதனை

கருந்தென் றலதும் காணா அண்டம்
 கருவின் உயிராய்காண் அன்னை
வருந்தென் படையும் வாழ்வில் செய்யும்
 வருத்தம் தன்னைக் குணமாக்கி
மருந் தென்றாகும் மண்ணின்வீரம்
 மலரச் செய்யும் நாள்மட்டும்
இருந்தென் வாழ்வில் எதுசெய்தாலென்
 இரந்தேனன்றோ  இதுவாழ்வோ?

புதிய பாதை

(புதுத்தம்பதியினர் திருமணம் முடிந்து வண்டியில் செல்லும் காட்சி)


காலைத் தூக்கித் தாளம்தட்டிக் காளை இரண்டு முன்னே பூட்டிக்
  காலை நேரம் சாலையோர மோடுது வண்டி -அதைக்
  காண நெஞ்சம் துள்ளுதடா கடகடவென்றே

வாலை யாட்டி மூச்சுமுட்ட வண்டிமுன்னே தோளுயர்த்தி 
  வைத்தடிக்கு நல்லமாடு வேகமுங் கூட்டி -அது
  வந்த காற்றை மோதி வென்று ஓடுது பார்நீ     
சேலை கட்டும் மாதொருத்தி சின்னப்பெண்ணைத் தாலிகட்டிச்
  சேர்ந்துவாழ இரண்டுபேரும் ஆசையில்கூடி அங்கு
  செல்லுகின்ற வண்டி மீது உள்ளதைப் பார்நீ!
மாலை மாற்றிக் கைபிடித்து மங்கை நெற்றி பொட்டுமிட்டு
  மாது காதல் கொண்ட அந்த மன்னவன்நாடிச் - செல்ல
  மாந்தர்கூடி வாழ்த்துன்றார் மங்கலம்பாடி

ஓலைமீது ஓடிவீழும் கூரைசொட்டும் தூறல் போல
  ஓரக் கண்ணிலூறும் நீரைக் கீழே விழுத்தி - அன்னை
  ஊரை விட்டுப போவதென்று வாடும் ஒருத்தி
பாலைப் போலும் உள்ளங் கொண்டு பாதைமீது ஆடிநின்று
  பாட்டுப்பாடி ஓடும் சின்னக் கூட்டமும் கண்டு - அந்தப்
  பேதையுள்ளம் மீண்டுங் காணும் ஆனந்தம் கொண்டு
சோலைக் காற்றும் வீசக்கொப்பில் தொங்கியாடும் மந்திஒன்று
  சுத்தமான தேனடையை உண்டதன் பின்பு  ஆடிச்
  சோர்ந்து போகும்போது  காணும் தன்மையுங் கொண்டு
சாலையோடு போகும்வண்டி சடசடத்த ஒட்டம்மாறிச்
  சற்று சோர்ந்து போனதென்ன வீதியில் இறங்கி - அது
  செல்லும்பாதை கோவில்பக்கம் மண் அணைவீதி


துள்ளும்காளை தாளங்கேட்டு தூரநின்று கூவும் பட்சி
  துள்ளிசைக்குக் கூச்சலிட்டு பாடுதுகத்தி - அயல்
  தோழமை கொண்டான தொன்று கொஞ்சுது முட்டி
முள்ளைத் தன்னில் கொண்டதாளை மூடிஎங்கும் கூரைநீட்டி
  முன்னிருக்க பாம்புஒன்று போகுது சுற்றி  - அது
  மௌனத்தாலே சொல்லும் சேதி நெஞ்சினில் பற்றி
வெள்ளை நீல வான் பறக்கும் விட்ட பஞ்சு கொண்டமெத்தை
  வைத்தபூக்கள் மீதுறக்கம் கொள்வதுமல்ல - இன்பம்
  வாரி அள்ளித் தூவும் வாழ்வு முற்றிலுமல்ல
உள்ளம் உண்மைகாண வென்று அன்னை சொல்லும் சேதிபற்றி
  ஒன்றுகலந் துறுதிகொள்ளும் இதயமும் கொண்டே-  இவர்
  உலகவாழ்வில் பயணம்போகும் உன்னத காட்சி

பூமி பொறுத்தது ஆழி பொங்குமா?

நீலத்திரைக்கடல் ஓரத்திலே நானும்
நின்றிருந்தேன் வரும்பேரலைகள்
ஞாலத் தரையென்னும் மேடையிலே எழில்
`நாட்டியமாடிக் களித்திருக்க
ஓலத்தை ஒத்தொரு கூக்குரலில் கடல்
ஓங்கி ஒலிப்பதும் ஏனோ என்றே
கோலத்தைக் கூறிடும் காற்றினிடம் நானும்
கேட்டுவைத்தேன் அது ஆழியிடம்

காலைக் கருக்கலும் நாள்விடிந்தும் கடற்
காரிகையே இன்னும் அச்சமென்ன
மேலைத்திசை விழுந் தாதவனும் அதோ
மின்னிக் களிப்பில்மீண் டேறுகிறான்
சேலை கறுப்பிளம் மேனி விட்டும் உந்தன்
சிந்தை வருந்தி அழுவதென்ன
தோலைக் குளிர்கொள நீலமெனும் ஆடை
துள்ளும் எழிலுற நீயுடுத்தும்

ஆடும் இன்பம் விட்டு ஆனதென்ன செம்மை
யாகி அவ் வாதவன் போற்றுகிறாய்
மூடுவெயில் உந்தன் நீர்கவர்ந்தே அந்த
மேகவெளியினில் பஞ்செனும் வான்
ஓடும் அசைந்திட மென் துகிலாய் முகில்
ஓங்குவி தானத் திரை யமைத்தான்
கேடுதனைச் சொல்லி நெஞ்சலறியென்ன
கேட்டுநீதி எங்கும் வந்ததுண்டோ

என்றது மாழி நீர்தா னெழுந்து அலை
ஓங்கிய வேகத்தில் கீழ்விழுந்து
பின்னிப் புரண்டிடும் தென்றல்தனைச் சினம்
பொங்கப் புயலெனும் தீமை சொல்லி
மென்னுள்ளம் பீதியில் அல்லலுறச் செய்து
மீண்டும் மலர்வனச் சோலை சென்றே
கன்னம் தடவியும் பொன்மலரின்வாசம்
கண்டு கவர்ந்தோடும் தன்மை கொண்டாய்

எந்தன் கதையினைக் கேட்டதனால் வட்ட
இன்ப நிலவன்று தேய்ந்தழுதாள்
நந்தவனப் பூக்கள் சோர்ந்து விழ அதை
நாடிடும் வண்டு ரீங் காரமிட்டே
சிந்தனைகொண்டு திரும்பிவிட மழை
சோவெனக் கொட்டிக் கதறியதில்
என்துயர் எத்துணை இன்னல்தரும் அதை
இன்று மனங் கொள்ளப் பாருமய்யா

நித்தம் அலைந்தும் உயர்திரைகள் கொண்ட
நேரிய வாழ்வினைக் கண்டிருந்தேன்
சுத்தம் கொளப்பல நன்மைசெய்வேன் இந்தச்
சுந்தர பூமியில் மானிடர்கள்
ரத்தம் வழிந்திடச் செய்கொலைகள் தம்மை
ராஜமுத் திரையும் கொண்டவராய்
செத்துப்போ என்றே சிரசறுத்து தமிழ்
சொல்லும் இனத்தைப் புதைத்தெரித்தார்

உத்தமன் ஆதவன் ஓடிவிழுந்தெழும்
உன்னத பொன்னெழில் மாலையிலே
புத்துணர் வோடுயர் காலையிலே யிரு
போதிற் செம்மையடி வான்பரவ
எத்தனை இன்பமென் றாடியதும் இன்று
ஏனோ மறைந் துயர்மேவியதாய்
குத்தியழித்திடும் செந்தமிழர் உடல்
கொட்டும் உதிரம் கண்டஞ்சுதடா

அந்தியிலும் காலைப்போதினிலும் அந்த
ஆதவனின் எழில் செம்மைவண்ணம்
செந்தமிழர் வீரம் காட்டுதென நானும்
தேகம் மிளிர்ந்திட மின்னலுற்றேன்
சிந்திவிழுத்தது நற்தமிழர் கொள்சு
தந்திரம் வேண்டிய செம்மைகண்டு
அந்தியும் காலையும் ஏக்கமுற்றும் அது
ஆறாதெந் நேரமும் ஆர்ப்பரித்தேன்

சத்தியமே என்றும் வெற்றி கொள்ளும் எனச்
சாத்திரம் சரிதை நூல்களெல்லாம்
பத்திபல கொண்டு காண்கையிலே இந்தப்
பாரில் நிகழ்வது வேறல்லவோ
ரத்தக்குளிப்பினில் போதைகொண்டு இங்கு
வெட்டிக்களித்திடும் புல்லரினை
சத்தமின்றி காந்த பூமிவிட்டு அவர்
சுற்றும் விண்ணிற் போக கொட்டிவிடு

சுத்தமனங்கொண்ட பூமியென இந்தச்
சோதியெழும் அண்டமாவெளியில்
சித்தமெடுஎனச் சொல்லியென்ன அதைச்
செய்ததில்லைப் புவி புத்தியிலே
மொத்தமும் மண்ணெனப் போனதுவோ இந்த
மோச மிழைப்பவர் குற்றங்களை ’
அத்தனையும் புவிதாங்குதம்மா இந்த
ஆழக்கடல் ஓர்தினம் பொங்குமம்மா

***************