Wednesday 2 July 2014

துன்பமே மிஞ்சும்

நெஞ்சம் கனக்குதடி தங்கமே தங்கம் - இந்த  
நீண்ட வழிப்பயணம் எத்தனை தூரம்
அஞ்சக் கிடக்குதடி அன்பெனும் உள்ளம் - அதில் 
ஆடிக் களிப்பதென்ன அன்னையும் தினம்
மிஞ்சிக் கிடப்பதென்ன மேனியின் சுகம் - தனை
மீளப் பறித்தெடுக்க எஞ்சிய துன்பம்
நஞ்சை நிகர்த்சுவை வாழ்வதுகொளும்- விண்ணை 
நாடிப் பறக்கவெனக்  கெஞ்சுதே மனம்

எட்டிநடந்து வந்தேன் எத்தனை துயர் - அதில்
ஏனோ நடந்தவழி இச்சைகள் படர்
தட்டி விழுத்துமனம் தான் தரும் இடர் -அது 
தானே எனக்களித்த தர்மத்தின் கரம்
கட்டி இழுத்த தந்த காமனின் கணை - அது
காலம் விதித்த இருள் கண்கெடும் விதம்
முட்டி விழுத்த வந்த முன்வினைபயன் - என் 
மூச்சை நிறுத்தவென்று மோகம்கொள்வதென்

சட்டச் சட இடிகள் சஞ்சலம் தரும் - அதில் 
தாங்கா மனம் கலங்கி நீர் வழிந்திடும்
இட்ட விதியின் செயல் இத்தனை கோரம் - அதை
எண்ணி பதைபதைக்கும் ஏகமென்மனம்
வட்டிகொடுத்து மிந்த வாழ்வெனும் தனம் - அதை 
வந்து விதிபறிக்கப் போரிடும்குணம்
நட்டமதைத் தவிர நான் பெறும் சுகம் - இந்த 
நாளின்வரை இவனும் கண்டதில் எனும்

செட்டைமுளைத்துமந்த வான் பறந்திடும் - வரை 
செய்யும் அவலம் இதைக் கேட்பதற்கெனும்
சட்டம் இயற்றவிங்கு யாருளர் இனும் - இது 
சுட்ட குருதிகலந் தோடிடும் ஆலம்
கொட்டவிழித்திருக்க கோடிகள் கொல்லும் - சில 
கொள்கை எடுத்தவரைப் போலும் விதியும்
வட்ட உலகில் எந்தன் வாழ்விருந்திடும் - வரை
வந்து வழித்துணையென் றிம்சைகள் செயும்

No comments:

Post a Comment