Wednesday 9 July 2014

வாழும் வழி

ஓடித்திரிவது மேகம்
உட்கார்ந் திருக்கும் மலைகள்
கூடிக்குலவிட வந்தே
கொட்டும்பனிமழைத் தோற்றம்?
ஆடித் திரிவதும் ஆறு
அலைகள் தோன்றிடும்நூறு
தேடித் திரிவதும் என்ன
திசைகள் அறியாப்பயணம்

வாடிச்சோர்வது கமலம்
வாழ்க்கை இருளென மாறக்
கூடிகொள்வது அல்லி 
குளநீர் சந்திர பிம்பம்
தேடிக் கொள்வது மகிழ்வு
திகழும் காற்றின் குளுமை
வேடிக்கை விடிவெள்ளி
விளங்கப் பெரிதெனும் மாற்றம்

மூடிக் கிடப்பது மேகம்
மெல்லப் பரவிடும்காற்று
பாடித் தொழுவது தெய்வம்
பார்த்துப் பொழிமழை முகிலும்
தேடித் திரிந்திடும் தென்றல்
தொட்டாற் சிலிர்த்திடும் மேனி
வாடிக்கை என வாழும்
வாய்ப்பைத் தருவது வாழ்வு

சூடிக்கொள் மலர்மங்கை
சூழல் காமுகர் இச்சை
வாடிசோர்ந்திடும் பூவாய்
வன்மை துய்த்திடும்மோகம்
வேடிக்கை இதுதானோ 
வினையும் முடிவடையாதோ
நாடிப் புவிதனை மாற்று
நன்மை தரும் நல்வாய்ப்பு

கேளிக்கை புலனின்பம்
கீழெண்ணம் கெடுநோக்கம்
கேளிர் கெடுமன திச்சை 
கொள்கை கூற்றுவன் கையாள்
மூளும் பகையொடு கீழ்மை
முனைவாய் வென்றிடல்தேவை
நாளில் கிடைத்திடும் தேடு
நாடு வரும்நல் வாய்ப்பு!

வாய்ப்புகள் தந்திடும் வாழ்வு

வாழப் பிறந்தும் வழி இல்லென்று
வாட்டம் கொள்வோரே
வீழக்கிடக்கும் மனதால் வெல்லும்
வாய்ப்பைத் தேடுங்கள்
நீளக்கிடக்கும் வாழ்க்கைப் பாதை
நிறைந்தே வழிகாணும்
ஆழக்கடலே என்றாலும் காண்
அலைகள் கரைசேர்க்கும்

சாயக் கிடக்கும் தருவும் உலகில்
சரிந்த கோபுரமும்
மாயக் கனவே போலும் இந்த
மண்ணில் நிலைகொள்ளும்
நேயத்துடனே நெஞ்சும் நிமிர்ந்தே
நடையைக் கொள்ளுங்கள்
தேயக்காணும் நிலவும் வளரும்
திறனைக் கைக்கொள்வீர்

மேளக் கதியாய் அடிகள்பட்டு
மின்னல் கண்டாலும்
காலக் கதியில் ஓடும் பூமி
காற்றில் தொலைந்தாலும்
ஆழக் கிடக்கும் மனதில் தீரம்
அறிவைப் போற்றுங்கள்
வீழக் கிடைத்த வாழ்வேயல்ல
வெற்றிக்காம் எழுவீர்

கூவும்குயிலும் ஆடும் மயிலும் 
குருவிக் கூட்டங்கள்
தாவும் மந்தி தண்ணீர்பூக்கள்
தாங்கும் சுனைநீரும்
யாவும் கொண்டோம் அன்னைபூமி
யாரில் குறைசொல்ல
ஏவும் விதியில் எதுதான் குற்றம்
இயற்கை முரணாமோ

பூவும் பிஞ்சும் பின்னே கனியும்
பொலிந்தோர் சோலைக்குள்
நீவும்தென்றல் நீரின்குளுமை
நீந்தும் மீன்கூட்டம்
ஆவும் கன்றும் அம்மா என்கும்
அன்பின் தேடல்கள்
சாவும் அழிவும் துன்பம் ஆகிச்
சீற்றம் கொள்ளல் ஏன்?

நூலைக் காணும் விழிகள் இடையில்
நிற்கும் வியப்பெண்ணி
பாலை மணலின் சாயல் கொள்ளும்
பட்டுத் தோல் கண்டே
வாலைப்பருவ வண்ணம்தேடும்
வகையில் செல்லும் முன்
நாலைப் பத்தை நலமே எண்ணி
நாடும் நினைவிற் கொள்

சாலச்சிறந்த பண்போ டன்பும்
சாரும் உளம்கொண்டே
காலக் கொடுமை கலியும் நீக்கும்
கணத்தைத் தேடுங்கள்
ஞாலத்திடையே வாழுமெண்ணம்
நெஞ்சிற் கொள்ளுங்கால்
போலப் பூவாய் செல்லும் வழி வாய்ப் -
புக்கள் மலராதோ

பாலை வனத்தே கானல்நீரைப்
பார்க்கும் மான் போலும்
மாலைச் சேர்வில் மஞ்சள்வானில்
மறைவெண் மேகமென
சாலையோரம் தூறல்கண்டே
சாரும் தருவோடு
காலை கொள்ளும் நட்பும் மாலை
கனவென் றாவதுபோல்

ஆகும் மாயம் ஏதும் அறியா
அறமே கொண்டாலும்
போகும் பாதை முள்ளென் றாற்போம்
பயணம் என்னாகும்
நாகம் நிற்க நடுவே காட்டின்
நடை பாதை யோரம்
தேகங் கொள்ளத் தீயும் எழுந்தால்
திண்மை தொலயாதோ

சாகும் நினைவும் கொண்டே யுள்ளம்
சஞ்சல மாகாமல்
வேகும் மனதில் வெள்ளிச் சதங்கை
வீணை ஒலியோடு
பாகும் பழமும் பகிர்ந்தே தேனைப்
பருகும் சுவையாக
ஏகும் அன்புத் திசையில்கொள்வீர்
எடுக்கும் காலடிகள்

வாழ்விற் தோன்றும் வாய்ப்புக்கள் செல்
வழியை இலகாக்கும்
வீழ்வில் முடியும் வாழ்வேயென்று 
வீணில் எண்ணாது
தாழ்வில் எழுமின் தக்கோர் வழியும் 
தேடப் பரிவாகும்
தோள்கொள் தீரம் துணிவும்கொண்டு
தூரப் பாருங்கள்

தேயும் நிலவின் தேகம் தானும்
திரும்ப வளரும் காண்
மாயும் நளினப் பூக்கள் நாளை
மற்றோர் முகையவிழும்
பாயும் அருவிப் பாறைவீழ்ந்து
பரந்தே நீர்தூவும்
ஓயும் எண்ணம் இல்லைநாமோ
உறங்கிக் கிடக்கின்றோம்

சாய்வது கதிரா சற்றுப்பொறுங்கள்
சந்திரன் வானேறும்
தேய்வது கண்டால் சோகம்வேண்டாம்
தினமும் விடியல் காண்
மாய்வது ஒன்றே தீர்க்கும் வழியாய்
மயக்கம் கொள்ளாமல்
வாய்ப்பும் தாரும் வாழ்வின் பயனை
வெற்றிக் கணமாக்கு

Sunday 6 July 2014

கண்ணீர்

நீரோடும் நிலவோடும் நின்றேவெண் முகிலோடும்
  நெஞ்சத்தில் எண்ணமோடும்
தேரோடும் தென்றலது திக்கெட்டும் பரந்தோடும்
  தேடியிரு கண்கள் ஓடும்
பாரோடும் பாரினிடை பன்நிலங்க ளைந்தினிலும்
  பலரோடிச் சென்றேவாழும்
வேரோடும் உறவுதனும் விளையாடும் விதியதுவும்
  வேடிக்கையாகும் வாழ்வும்

ஏரோடும் வயல்கூடி எதிரோடும் காற்றோடு
 எழுகின்ற இன்பம் யாவும்
பேரோடு புகழ்வாழ்வுப் பெருச்செல்வ வாழ்வினிலே
   பிறையாகத் தேய்ந்தே போகும்
சேறோடும் மண்ணோடும் உழுதோடிப் பின்னாலே
   சேர்ந்துறவோ டுண்டே வாழும்
நோயோடிப் போகின்ற நிம்மதிகொள் வாழ்வுதனை
   நினைந்தே யென்நெஞ்ச மேங்கும்

யாரோடிக் கேட்டாலும் விதியோடிச் செய்கின்ற
   விளையாட்டு வேறென்றாகும்
நீர்கூடி எழுகின்ற நீளஅலை போல்வந்து
    நிற்பதெல்லாம் அள்ளிப்போகும்
வேரோடு புயல்வீச விழுகின்ற மரமாக
   வீழ்த்திநம துறவைக் கொல்லும்
பேயாடி நடமாடிப் பிறக்கின்ற அழிவாகப்
  பேசாதுயிர் கிள்ளிப்போகும்

நானோடி நடக்கின்ற நல்லதொரு பாதைதனில்
     நாலுபேர்கள் தூக்கியே ஒடும்
நாளோடி வரும்வரையும் நானாடி நடந்துசெலும்
  நாளதுவே இன்பம் ஆகும்
பாவோடும் பாஎண்ணும் மனதோடும் வாழுவது
  பலமான உணர்வே கொள்ளும்
பாலோடு  பனியோடு பார்வைதனைக் கொள்ளுவது
   பாவி இவன் உளமேயாகும்

மேலோடும் மதியோட முகிலோடி மறைத்துவிட
    மெல்லவரும் காற்றும் ஓடும்
சேலோடும் நீர்ச்சுனையில் சேற்றோடு தாமரையாள்
  திகழ்ந்தாலுந் தூய்மைகாணும்
வேலோடு விளையாடும் வேல்முருகன் தமிழோடு
  விளையாடி நாளும்போகும்
காலோட முடியாது காடோடும் உடல்காணும்
   காலமே உண்மை யாகும்

கற்பனை என்னும் மாயை

கற்பனை என்றொருகோட்டை  - அங்கு
   கால காலமாக வேட்டை 
கொற்றவனாய் தினம் கூடும் - அந்தக் 
   கோல அரண்மனை மாடம்
பற்றுடனே பணியாற்றும் - பல
  பாவைகளின் எண்ணக் கோலம்
வற்றும் நிலை யற்ற பொய்கை அது
  வந்து சுற்றிக்காணும் வண்ணம்,

பொற்சுடர் மின்னி விளங்கும் - அதில் 
  பொய்களின் இராச்சியம் ஓங்கும்
விற்பனை மொத்த அறிவாம் - அங்கு
  வீரிட்டழும் உண்மை தானும்
கற்குகை யாகினும் வாழும் - உள்ளம்
  காணும் அரண்மனை வாசம்
புற்தரையிற் பனி மேவும்  - அங்கு
   போதையின் நித்திரை காணும்

கண்கள் கூசும் ஒளிவெள்ளம் - அங்கு 
  காற்றில் மிதக்கும் நல்வாசம்
கொண்டவர் மேனி சிலிர்க்கும் - மனம்
   கொஞ்சிக் களித்திடு மின்பம்
வெண்ணிறப் பூக்கள் மலரும் - வந்து 
   வீழ்ந்தநட் சத்திரம் மின்னும்
எண்ணம் கிறங்கித் தவிக்கும் - அது
   எங்கெல் லாமோ சென்று மீளும்

செண்டில் மலர் வண்டு ஆடும் - பக்கம் 
  சித்திரங்கள் நின்று பேசும்
தண்டினில் ஆடுந்தா மரைகள் - மன
   தாகமெழுங் கதிர்க் கண்கள்
மண்டல மெங்கணும் யாவும் - உன்
  மாண்பு தனைப்பேசிப் போற்றும்
கண்டதெல்லாம் கையிற் கொள்ளும் - அந்தக் 
  கற்பனை சாத்தியமாகும்

தாவும் மரம் தொங்கியோடும் - அது
  தானு மெந்தன் மனமாகும்
தூவும் அடைமழை கூடும் - அது 
  சொட்டும் நீரையல்லப் பூவும்
நீவி அலைத் தென்றல் சுட்டும் சில 
  நீல மலர்கெட்டு வீழும்
நாவிலிசை உயிர் கொள்ளும் அதில்
  நர்த்தன மாடிடும் உள்ளம்

பேயின் கூச்ச லிடும் சத்தம் - அது
   பிய்த்து வீசும் மன அச்சம்
நாயின்ஓ வென் றொரு ஓலம் - அந்த
   நாழி கத்தும் இருட்கோட்டான்
தேயும் நிலவுடை  தோற்றம் - கணம்
   தேகம் உறைகின்ற கூச்சல்
மாயும் எண்ணங்களில் மாற்றம் - உடன்
   மானிட வாழ்வின் மரணம்

தேவைகளின் வெறும் சூன்யம் - இனி
  தேனில்லை வாடும்மென் பூக்கள்
சாவை அணைத்திடும் கண்ணில் - அது
   சஞ்சல மற்றதோர் தூக்கம்
தேவியின் கூடும் தீவாசம் - மனம்
   தீங்கில்லா என்றிடக் காணும்
ஓ,விளை யாட்டிவை யாவும் என் 
    உள்ளத்தின் கற்பனையாகும்.

நம்பிக்கை வானில் உதிக்கிறது

நான் நடக்கும் பாதையெங்கும் நல்லொளித் தோற்றம் - அதில்
நர்த்தனஞ்செய் ஏந்திழையர் நிகர் சிலையாட்டம்
தேன்குரலில் பாடுமிசை தென்றலில் சேரும் -அந்தத்
தீந்தமிழின் ராகமழை தித்திப்பை யூற்றும் 
கானகத்து நீள்மரங்கள் காற்றினிலாடும் - என்
கால்நடக்கப் பூஇறைத்துக் களிமிகுந்தாடும் 
தேன் சுவைக்கப் பழுத்தபலா  தீஞ்சுளை கொள்ளும் - என்
தேவை பசிநீக்கவெனத் தாழ்ந்தடி தூங்கும்  

வான் தெளித்த நீர்சரங்கள் வந்தெனில் வீழும் - அவை
வாடிமனம் சோர்ந்துவிடா வந்தெனை நீவும்
ஏன் நடந்தகால் அடடா இம்சையில் நோகும் -  என
ஏற்றமலர் பூம்படுக்கை இயற்கை யுண்டாக்கும்
மேன்மைகொண்ட  தமிழிசையின் மெல்லிய ராகம் - அது
மேளதாள ஒலியெடுத்து மின்னிசை கூட்டும்
தான்நடந்த அன்னநடைத் தண்ணிலவாளும் - ஒளி
தாவிவழி மூடுமிருள்  தன்மையைப் போக்கும்

கண் நிறைந்த காட்சிகொண்ட கற்பனை ஊற்றில் - பெரும்
கரைபுரண்டு துள்ளும்நதி கால் தொடக் காணும்
மண்ணுருண்ட பூமிபசும் மரகத புல்லில் - நல்ல
மகிழ்வெடுக்கப் பாய்விரித்து மலர்களைத் தூவும்
எண்ணி யெதென் தேவையென இயம்பிடமுன்னே - என்
இமைவிழிக்க முன்னெழுந்தும்  என்கரம்சேரும் 
தண்மைகொள்ளும் அலையெனவே தரைபடவீழும் வாழ்வு
தாங்கும் திரை ஓங்கியெழும் தன்மையில் ஓங்கும்

பொன் ஒதுக்கும் மனமறியாப் பூவையர் கூடி - மனம்
போதைகொளும் புன்சிரிப்பில் பிறந்திடும் மாயம்
புன்மை நாசம் பேரழிவுப் போக்குகளற்றே - ஓர்
புத்துலகச் சூழலிலே பிறந்திடும் வாழ்வில்
அன்பு கொண்ட நெஞ்சமொன்று அன்னியமற்றே - எந்தன்
அன்னைபோலும் பக்கமிருந் தணைத்திடக் காணும்
பன்மையாகப் பரவசமும் பாதியென்றாகும் துயர்
பனிபடர்ந்த வேளை கதிர் படும் நிலையாகும்

இனியோர் பிறவி வேண்டாம்

சப்தமிட்டும் வானெழுந்த சக்தி . 
சட்டெனப் பரந்துமெங்கும் ஓடிக் 
குப்பெனப் பிடித்த தீயும் மின்னிக்
கொண்டதோ வெடித்த சத்தங்கூடி
இப்பெருத்த அண்டம் ஊது சக்தி
ஏகமாய் விரிந்ததென்ன காணீர்
வெப்பமும் வெதுப்புடைந்து தீயில்
விண்ணெனும் அகன்ற வேளை நாடி

அப்பனை அவர்க்குமேலே  ஐயன்
அங்கவர்க்கும் மூதை யானவர்க்கம்
இப்புவிக்குள் வைத்துஒட்டி நில்லென்
றெத்துணை விசித்திரங்கள் செய்தாள்
சொப்பனம் கொடுக்குமின்பம் போலே
சுற்றியும் மலர்கொள் சோலையாக்கி
தப்பெனும் நினைவெடுத்தும் கூடி 
தத்தியும் நடக்கும் பிள்ளை யாக்கி

வித்தை9கள் புரிந்த நாமும்கொள்ள
வேண்டியும் இருத்திவிட்ட தென்ன
அத்தையும் கொடுத்த மாமன் பெண்ணை
ஆசையில் இழுக்கும் கண்ணின்காந்தம்
இத்தரை விழுந்த வீர்மார்பும்
இச்சையில் உருண்டதாகக் காணும்
அத்தனைபொருள் பொன் மேனியாசை
ஆங்கெமக் கென்றீந்து மண்ணில் விட்டாள்

ரத்தி னச்செங் கம்பளம் விரித்து
ராஜமா நடை நடந்த போலும் -[
அத்தனை பொற்காசின் மோகம்கூடி 
ஆசையில் விளைந்த பெண்மைநாடி
புத்தியும் இழந்து பொய்மை பேசிப்
புல்லரித்துக் காண் சுகங்கள் மேவி
நித்திரைக்குள் போயிருண்டதாக
நேர்ந்திடு மிவ்வாழ்விலென்ன மீதி

சுற்றிலும் கருத்த பேய்கள் கூடிச் 
செய்யெனக் குரல்கொடுக்கத் தேடிப்;
பற்றியும் இழுத்து கொன்ற மாந்தர்
பாரிலே இவர்க்கு நாமம் வேந்தன்
கற்றலும் மறந்த கண்கள் ,மூடி
காணு,மிவ்  கொடுகோல் கையில் பற்றி
சிற்றுடல் சிதைக்க சேர்ந்துமாடி
செய்மனக் குரோத மன்னர் காணீர்

சித்தமும் கொண்டாடும் இன்பந்தேடி
சிந்தனை, குரங்கென்றாக மாறி
உத்தரிக்கவென்று பாவம்தேடி
உள்ளதும் நல்சக்தி விட்டு கூடி
சுத்தமும் மறந்தழுக்கை வேண்டி
சுந்தரன் எனக் கனத்தில் ஊறி
இத்தரை மறந்து போகும் நாளும்
என்றெனக் கென்றேதும் எண்ணமின்றி

கற்றதும் கரங் கொடுக்க வில்லை
கண்டதும் படித்த ஞானமில்லை
செற்களி லுரைத்த முன்னைச் சான்றோர்
சுட்டிடும் தீயென்ப கேட்கவில்லை
நற்குணம் நலிந்தவாழ்வில் கூடி
நர்த்தனன் தன்மங்கை மேனிபாதி
உற்றவன் உதைத்து மண்ணிலாட
ஓர்பிடிக்குள் சாம்பலாகும் செந்தீ

இத்தரை கொள்வாழ்வு மென்ன வாழ்வோ
எச்சுகம் நிலைத்திங்கு யாவும்
தித்திக்கும் எனச்சுவைத்த மாயை 
தென்றலில் விழுந்தலைந்த பூவை
ஒத்திடக் கிடப்பதென்ன வாழ்வில்
எத்தனை எடுத்தும் பாவம் உச்சம்
சத்தியம் இப்பாழ் கிடங்குப் பூமி
சுற்றிமீள் பிறக்கும் வாழ்வு வேண்டாம்

வருத்துதல் ஏன் அன்னையே!

நினதருள் பலமொடு தினமதை பெறுவித
நினைவொடு தொழுதிடினும்
மனமது மகிழ்வெழ மடியிலினில் தலையிரு
மகனெனக் களிகொளினும்
கனமது முடியினில் கடுகள விலையெனக்
கலகலவென மகிழ்ந்தும்
எனதுள மதனிடை எது வொரு நெருடலை
எழுபட முயலுவதோ

வழிபடும் பொழுதுனை வருவது நலமெனும்
வளம்பெரு கிடவிருந்தும்
விழிகளில் பெருகிடும் ஒளிதனும் குறைவிலை 
வியன்பெறு வகை தெளிந்தும்
பழிகொள அயலிடை பகையிலை உறவுகள்
பனிமலர் மெதுமையெனும்
வழிபெற நிலையெடு வகைதனும் கொளமனம்
வருந்துவ திடையினிலேன்

பொழிலிடை அவிழ்மலர் புதுஇதழ் விழிபெறப்
புனர்வுறு மனமிழைந்தும்
ஒழிதுயர் உலகமும் உனதெனும் சுவைமிகு
உணர்வொடு  குரல்எழினும்
களிபெரு கிடவதை கறைபடு முடைதனும்
கடுகென எடைகொளினும்
நினைவெழு முளதிடை நிகழ்வது மெது தினம்
நெருடலைத்  தருநிலையேன்

விழுவதென் இனமிவர் விலகிடும் உரிமைகள்
விடுதலை கனவெனிலும்
குழுவென உயர்குல குணமுடை தமிழரின் 
குலவழி பிறந்தனெனும்
தழுவிடும் இனிதமிழ் தகைமையில் உயர்மொழி
தலைமுறை யிதில்பெரிதும்
நழுவிடப் பிறமொழி நடுவினில் வருவதும்
நகையல்லப் பெருந் துயரேன்

முழுபொழு திசைவுடன் முகைநறு மணமலர்
முதிர்விட லெனமுகமும்
விழுவது சரமலர் விருதுகள் புகழென
விருந்துகள் பலபெறினும்
கழுவினில் எரிபடும் கயமையின் உணர்வொடு
கவலைகள் மனம்கொளலேன்
தொழுதிடு முயர்தமிழ் துயருறும் நிலமெனில்
துவைபடு மனவதையேன்

விழுமலர் கொடிதனில் வெகுஎழி லுறவிதழ் 
விரிந்திட இருந்திடினும்
தழுவிடக் கொடிபடர் தருஇலை யெனிற்தனி 
தவித்திடு நிலைமனமும் 
எழுதுசொல் மொழியெனும் இனிதமிழ் அழகுடன்
இருந்திட மனம்மலர்ந்தும்
முழுஇனம் அழிவுறும் நிலைதனில் கரம்தரும் 
மனதுடன் எவரில்லை யேன்

மாற்றமில்லை!

வாழ்ந்து கெட்டது போதுங் கொள்ளடி சக்தி - இந்த
வான்வெளியினில் நீபடைத்ததென் வையகம் சுழன்றோடி
தாழ்ந்து நிற்குது தன்நிலையினில் மாறி - வெறும்
தங்கம் பூசிய தகதகமிளிர் தகரப் பந்தென மாறி
சூழ்ந்து கொண்டதென் சுற்றிலு மிருள் மூடிச் - சுவை
செங் கரும்பதன் அடிமுடிந்திட நுனியிவர்க்கென ஆக்கி
வீழ்ந்தே விட்டுயிர் ஆயிரமெனக் கோடி - இவர்
வீணென இனம் சாகுமிந்நிலை விட்டது கரம் மாறி

ஆழ் மனதினில்நோய் பிடித்தவர் கூடிப் - பகை
ஆற்றிடும் செயல் துயரெழுந்திட அகமுடன்புறம் மூடி 
மூழ்கிவிட்டது நீரிடை முழு மேனி இதில்
மோகங் கொள்ளெனும் முறைமைகள்தனை விதி கெடுத்தது மாறி 
பாழ் மனதினில்  வாழ்எனு மிச்சை கூட்டி - அன்னை
பார்வதிமகன் கோவில்கள்தமை பார்த்துருகிட நாடி
சூழ்விதி கொளக்காத்திடு மெனப்பாடி -  அதில்
சொல்லி யும்விழி பார்த்திருந்தவர் கூடிக் கொன்றது பூமி

ஆனந்தமென ஆடிடும்  பெரும் உலகம் - அதில்
அத்தனை சுக வாழ்வுகொண்டனர் ஆயினும் தமிழ்சொர்க்கம்
தேனந்த சுவை போலிருந் தது வாழ்வு - அதில்
தித்திப்பென்பது தீயருக்கென தீந்தமிழ் கசப்பாக்கி
ஏனந்த வகையானது மெனஎண்ண - உளம்  
மேற்றதென்பது தீமை என்றிடின் தேகம்கொள்வதும் இம்சை
வானந்த அளவாயினும் கொள் இன்பம் - தர
வைத்தவளதை மற்றவர்கொள விதி தமிழ் உயிர்நெருட

நாளெழுந்திடுங் காலையின் கதிர்கண்டே - நாம்
நல்லொருமையில் கொள்சுதந்திரவாழ்வெனக் காணென்றே
வாளெடுத்தெமை விசிடும் பகைகண்டும் - நிலை
வாய்த் திடுமென நேர்விழிகொள வந்தெதிரிகள் ஓட்டி
தோளுரம்கொளத் தீண்டிடும் ஒர் நாகம் இனும் 
தீயனும் பெரும்யானை யும்வரச் சிங்கத்தின் முற்தோன்றல்
ஏழைகள் செலும் பாதையில் விட்டேங்கி - துயர்  
ஏற்றிவைத் திடர்கூட்டிக் கொண்டெமை இம்சை செய்வதுமேனோ

வாழ்வுனை அழித்தேகுவம் எனும்கொள்கை - இந்த 
வான்பரப்பினில் நீபொறித்திட்ட வையகம் கொண்டாட,
பாழ்படுத்திட வேகம்கொண்டிவை காணீர் - இது
பேயுறைந்திடும் பூமி யென்றிடல் பேச்சினில் தீதில்லை
மாளென முழுத் தேசமும் வலிதாரின் - இந்த 
மான் புனலென வான்கதிரெழும் கானலை உளம்நம்பி 
வாழ்ந்திடு விதியாகிடும் நிலைகாணின் - எந்தன் 
வார்த்தைகள் தனில் மீள்பரிவுற மாற்றிடமனம் எண்ணா!

பெண்களும் ஈழமும்


மனமோடி விளையாடத் தமிழோடு இசைபாடி
மகிழ்வோடு வாழ்ந்திருந் தோம்
கனமாகிப் படுநெஞ்சம் கலிகாண விதிகூடிக்
கவலைகொண் டஞ்சுகின் றோம்
தனமோடித் தொலைந்தாலும் தலைபோகும் நிலைவிட்டுத்
தவிப்பின்றி யமைதிகாண
இனமெங்கள் தமிழ்பேசும் ஈழத்து மாந்தரிவர்
இன்பத்தைக் காண்பதெப்போ

தினமோடி யெழுஞ் சூர்யன் தீயென்று சுட்டாலும்
திகழ் வாழ்வின் உயிர் ஊட்டமே
மனமோடி பகைவன் கை மறந்தே கைக்கொண்டாலும்
மதிகொண்டு செயும்காலையில்
சினந்தோடித் தவறென்னும் செய்குற்றம் பிழைதன்னைச் 
செய்வோனை அறம்வேண்டிடில்
கனவுகாண் குடிமக்கள்காத்திட்ட கடவுளிவர்
கருணை குரு எனவாழ்த்துமே

உயிரோடிப் படுந்துன்பம் உறவென்ற நிலைமாறி
ஒரு வாசலொளி தோன்றுமா
பயிரோடி வி|ளைகின்ற பாங்காக எம் வாழ்வும்
பயமின்றிச் சுகம் காணுமா
மயிலோடி நடமாட முகிலோடி நீர்தூற 
மலர்மீது தழுவுங் காற்றாய்
சுயமாகத் திரிகின்ற  நிலைகொண்டு பரந்தோடும்
சுதந்திரந் தனைக் கொள்வமா

       (அழகிய வாழ்வு )

சுனைநீரின் அலையாடச் சுருள்கூந்தல் அலைபோலும்
துவண்டோட எழில் பூத்திடும்        
தனை நீருள் மறைந்தாடும் தாமரைகள் பூமகளிர்
திருவதன அழகேந்திடும்
கனிவாழை நினைவூட்டக் காணுமா துளை பழமும்
கனிந்து வெடித்தான தோற்றம்
பனி காற்றிற் நடுவேயோர் பருவத்து இளமங்கை
பார்த்து நகை பூத்ததாகும்      
 
பூதாவி வண்டோடப் பூவையவள் விழியோடிப்
போவதெங் கென்றுபார்க்க
போதாது விரையென்ற பிரம்பாட நடைகாளை
பூட்டிய ச தங்கை யொலியும்
தாதா தெய் என்றாடும் தமிழ்மங்கை போலாக
தருமாவின் கனி பெண்ணவள்
காதோரம் படர்கன்னம் கன்றிச் சிவந்ததெனக்
கிளி நின்று தடுமாறிடும்

எழிலோடிப் பொலிகின்ற இன்பவாழ் விதுபோலும்
ஈழத்தில் பெண்டிர்காண
தொழிலே வன்கொலையாகித் தினந்தோறும் புரிகின்ற
தீந்தமிழ் எதிரிதானும் 
குழல்சூடும் மலர்மங்கை கொடியாகிப் படர்கின்ற
குடும்பத்தின் ஆணிவேரை
முழுதாயும் வேர்வெட்டி முற்றாக வீழ்த்தும் விதம்   
முடிவாகிப்  போவதெப்போ?