Thursday 23 May 2013

தீயாய் பொசுக்கிடு !

தீயெடுத்து வீசடா தீங்கினைப் பந்தாடடா
தீமையோடு மோதி வெல்லடா
வாயெடுத்துப் பேசுவோர் வார்த்தை ஜாலம் நூறடா
வாழ்விலேதும் மீதமாகுமா
பாயெடுத்து தூங்கவா பாவைமேனி ஆளவா
பட்டுடுத்து ஆடிப்பாடவா
நோயெடுத்து வீழவா நூறுகாலம் ஆயுளா
நிற்பதோ தீமேலே காலடா`

தாயெடுத்துக் கையிலே தீந்தமிழ்ப் பாலூட்டியே
தங்கவிட்ட திங்கு மேனடா
பேயெடுத்த கோலமும் போதைகொண்ட கள்ளரும்
புன்மை செய்யநீ முடங்கவா
காயமிட்டு வெட்டவும் காலினா லுதைக்கவும்
காண இன்னும் பேடி நாமோடா
நீயெழுந்து கேளடா நீதி தேவன் பார்வையை
நீள்கறுப்பு துண்டுமூடுமா

தூயஅன்னை செந்தமிழ் தீங்கில்லாத வாழ்வுடன்
தேசமொன்று தாயகம் அதில்
வேய இட்ட வேலியும் வீடுஎன்ற கோவிலும்
வேண்டுமென்று கூடிநில்லடா
தோயஎன்ன வான்மழை தூங்க என்ன மாவனம்
தேய அன்ன வெண்ணிலாவென
மாய வாழ்வு வாழென மந்திரத்தை போடுவர்
மாற்றமென்று மாண்டுபோவதா

தேய் மனம் துரத்தவும் தேசமெங்கள் மீட்கவும்
தேடிநூறு காலில் வீழ்வதா
பேய்குணத் திலோடவர் பிள்ளையென்று வாயிலே
போடும்பிச்சை தின்று வாழ்வதா
மாய்மனத்தின் மாயங்கள் மாறு நீ கரத்தெடு
மற்றதென்ன விட்டுநின்றதை
தீயென்றாக்குத் தீமைகள் தேசம்மீள் சுதந்திரம்
தேவை தீயைபோல் எரிந்திடு

No comments:

Post a Comment