Tuesday, 7 October 2014

முருகா ,உருகும் மனம்


 
எத்தனைமுறை நான் சித்தமெடுத்துனைக்
கத்திய ழைத்தாலும்
நித்தம் வருந்துயர் மொத்த மழித்துமுய்
வித்து விடென்றாலும்
முத்தமிழின் இறை சித்திதரும் அருள்
அத்தனையும் ஈந்தாய்
பத்தியுடன் உனை நித்தமும் தொழுதிட
இத்தரை வாழ்ந்திடுவேன்

மத்தை யெடுத்திடல் போலும் கொடும் அர-
வத்தை யெடுத்து மமு-
தத்தைக் கொளக் கடைந்திட்ட போதேஉயிர்
சத்தை அழிக்கும் விடம்
மொத்தமெனத் திரள்கண்டுமே அஞ்சவி-
டத்தை குடித்தவரின்
புத்திரனே மனம் கொண்டருள் கேட்டேன்
புத்தொளிர் வாழ்வீயாய்

பத்தை யெடுத்துடன் பார்விழி நாலிடைப்
பாதியும் சேர்குமரா
வித்தகனில் வெறும் கையுடன் முன்னால்
கத்தலை யெழும்சாக-
ரத்திடை வீழ்ந்தவ னாகியும் தப்பிட
எத்திசை நீந்தலென
இத்திசை என்றொளி முன்னுவந் தீந்தாய்
அத்தனையருள் நினதே

சொத்தென ஏதுமே பொற்கலயம்நிறை          
முத்தொளி இரத்தினமில்
உத்தமனே வடிவேலவனே உனை
நித்தமும் தொழுமென்னை
சுத்தமெனும் மனதோடு நிறைகுணம்
புத்தி தெளிந் துயர
நித்தியமாகிட நிம்மதிகண்டுமின்-
பத்தை யெடுத்திட வை !!

Monday, 6 October 2014

எங்கு சென்றாய் மகளே


மழைகொண்ட உறவுக்கு மரமென்றும் நினைவாக
மண்ணிலே நீரைத் தேடும்
களை கொண்ட பயிரன்பு கயமைக்கு பொருளாகும் 
கரங்களால் அழிந்துபோகும்
முளை கொண்டு வளர்கின்ற சமுதாயத் தோட்டத்தில் 
மகளே வா நீயும் நானும்
பிழை என்றுஎது கொண்டு பிரிவென்று வந்ததோ 
பதில் கண்டதில்லை இன்றும்

பிரிவென்ப மாறாத நியதிதான் இருந்தாலும் 
பேசற்ற நிலைமை போதும் 
பரிவென்ப மனம் கொள்ளும் பரிசென்றபோது மேன்
படையற்ற போரும்காணும்
வரியன்பில் கலந்திங்கு வரும்பாடல் நின்செவியுள் 
வண்டுண்ணும் தேனையூற்றும்
சிரியெந்தன் மகளே நின்திருவிழிகள் எனைக்காணச் 
சிலிர்க்கின்ற உணர்வு போதும்

பறியென்றே காலமெனும் தேவனுனைப் பாதியிலே 
பக்கத்தி லிருந் தகற்றி
முறியென்று நின்னழகுப் பேச்சிலுளம் நான் மயங்க 
முன்நின்று பிரித்து வைத்தான்
தெறிஎன்று தந்தைகொளப் பாசமுயர் தேர்ச்சில்லை 
திருகியுடைத் தரை வீழ்த்துவான்
குறிஎன்றும் வாழ்வரையைக் கொள்பவன் தனையிங்கு 
கூப்பிட்டு விடவும்செய்வான் 

எரிகின்ற நின்மனதின் இடர்தாரும் சினந் தணியின் 
இதில் மிச்சம் இன்பமாகும்
புரிகின்ற வரைதானும் புகைகொண்டு காணும்மனம்
பொய்யுள் வாய் மைமறைக்கும்
விரியுந்தன் சிறகுகளை விண்ணேறிப் பறக்கின்ற 
விதமாக நீயும்காணும்
சரியென்னும் நம்பிக்கை தவறாதென் மீதெழுமின்
சற்றும் துயரற்றுப்போகும்

வளைகொண்ட நண்டுதனும் வழிமீது நடக்கையில் 
வழமைக்கு மாறிஓடும்
சுளைகொண்ட பழமான தேன்சுவைப் பலாக்கனி 
சுற்றிக்கை தொட முள்ளாகும்
விளைகின்ற பசி நீக்க வெளித்தோற்றம் மறுத்தாலும்
விரித்துபார் பொய்யுள் மெய்யாம்
மழை தூற வெயில்காண வரும்வான வில் அல்ல
மகளே நாம்வாழவேண்டும்