Thursday 5 February 2015

காலத்தின் கோலம்

காலம் மாறிப்போச்சுதையா காலம் மாறிப்போச்சுது
கண்ணியமாய் காவல்செய்யும் காலம் மாறிப்போச்சுது’
கோலமின்று கூடிநின்று கொள்கைதனைத் தள்ளுது
கோணல்மனம் முன்னெழுந்து கூர்மதியை வெல்லுது
சீலமெனும் தேர்சரிந்து திக்குமா|றி ஓடுது
செவ்வடிவான் காண்கதிரும் தேயும் பிறையாகுது
ஆலமெலாம் அழகுபூசி அருங்கனி போலாகுது
ஆகமொத்தம் மின்னொளியில் அகல்விளக்கு அணையுது

காத்திருக்கும் மனமழிந்து காந்தசக்தி ஓடுது
கைப்பிடிக்குங் கருவியிலே காணுலகும் சிறுக்குது
பத்திரிகை நாளைவரும் பார்க்கலாம் என்றானது
பச்சையாக நேரொளியில் பாதிக்காட்சி ஓடுது
சாத்திரங்கள் போயிருக்கச் சத்திரங்கள் தேடுது
தத்துவங்கள் மேடைவிட்டு தம்வழியைப் பார்க்குது
ஆத்திரங்கள் கோபம் எல்லாம் அன்புதனை வெல்லுது
அத்தனையும் உள்ளமதை ஆட்சி கொண்டு பார்க்குது

மாற்றமிது மாற்றமில்லை மற்றப்பக்கம் புரளுது
மந்திரத்தை ஓதிவிட மாங்கனிகள் வீழுது
தேற்றவழி தோன்றவில்லை திரும்பி நிற்கச்சொல்லுது
தேவையெல்லாம் மின்னொளியில் தேகவண்ணம் மாற்றுது
ஆற்றலெல்லாம் கூகிளிலே ஆலவட்டம் போடுது
ஆக எங்கள் பேர்மறந்து அதையும் தேடச்சொல்லுது
நாற்றுநட்ட வயலினிலே நாம் விதைக்கப் போவது
சோற்றரிசி நெல்லையல்ல தீமைகொண்ட வாழ்வையோ

No comments:

Post a Comment