Monday, 19 January 2015

போகும் பாதை

நிலமீதில் உயிர்கொண்டு நெடுவானத்திடைநின்று
   நிலைகொள்ளப் புவி மீதிலே
குலமாதின் வயிற்றோடு குடிகொண்டு விளைந்தங்கு
   குரல் கொண்டு அழுதேவந்தேன்
பலமான உதைபோட்டு பணிவின்றித் தாயோடு
  பலக்காலம் துயர் ஈந்தபின்
நலமான தெனஎண்ணி நானோடிப் பிரிந்தேன் இந்
  நாள்எங்கு நான் செல்கிறேன்

ஓராண்டு புவிவாழ்ந்த உயர் மனத் துணிவோடே
  எழுந்து நான் நடைபயின்றேன்
சீராகக் கால்வைத்து திடமாக இல்லாமல்
  தினம்தினம் விழுந்தெழுந்தேன்
வாராயோ செல்வமே வளர்நிலா வாவென்று
  வார்த்தையின் அன்புகாட்டி
ஆராரோ தூங்கடா அன்பேயென் அமுதேயென்
  றன்னை யின்மடி கிடந்தேன்

வீராதி வீரர்களின் வெற்றியும்  தோல்வியும்
   வெள்ளி நிலவில் இருத்தி
சேராத அறிவூட்டச் சிந்தனை விளங்கிடத்
   சிறப்பான  கதைகள் கூறி
நேராக வழிகாட்டி நிறை ஐந்துவயதிலே
  நில்லென்று தமிழ் குழைத்து
சீராக ஊட்டினள் தேனெனும் தித்திப்பைத்
 தேகத்தில் சேர்த்துவிட்டாள்

நீராகும் விழிகொண்ட நேரங்கள் அறியேன் என்
  நெஞ்சத்தில் மகிழ்வேகொண்டு 
வேராகத் தமிழ்பற்றி விளைந்தேன் என் வானத்தில்
  வெகுவான கனவுக்கோலம்
தேராய் நற்கற்பனை தீட்டியதைக் கொண்டேநான்
   திக்கெங்கும் பறந்துமோடி
சேராத பொன் எண்ணிச் செல்வந்த ரூபனாய்
  தினம்தினம் மகிழ்ந்தாடினேன்

பூவெனும் மங்கையும் பொன்மேனி கொள்ளெழில்
  புன்னகை சொர்க்கம் என்றே
பாவெனும் மொழிகூறிப் பக்கம் நெருங்கிடப்
  பைந்தமிழ் இனித்த தன்றே
வாவெனும் பூஞ்சோலை வண்டென வாழ்வெண்ணி
   வலிந்து நான் போனபாதை
நோவெனும் உணர்வோங்க நெஞ்சத்தில் பிழையாக
   நேரற்ற பாதை கொண்டேன்

வேதனைத் துயர் வீட்டு வெறுமையும் ஏழ்மையும்
  விதி தந்து பரிகசிக்க
சாதனை யேது நல் தருமத்தின் துணையின்றித்
  தமிழ் மீது கோபங்கொண்டேன்
தீததைத் தந்ததேன் திசைமாறிச்சென்றதேன்
  திரும்ப வழி இலை என்றதும்
ஏததை மாற்றவென் றியற்கையின் பொன்மொழி
  என் தமிழ் மூடிவைத்தேன்

வாழ்விலெவை உண்மைநிலை வழிஎன்ன பொருள்என்ன
  வரும் செல்வம் ஒன்றேயெண்ணி
தாழ்வில் வழி செல்லாமல் தரைமீது வீழாமல்
  திசைவேறு நோக்கி நடந்தேன்
ஏழ்மையெனை விட்டகல எடுத்த அடி பூமலர
   இருந்தவோர் பாதைகண்டும்
ஆழ்மனதில்  இன்பமிலை ஆனந்த உணர்வுமிலை
  அகத்திலே வெறுமைகொண்டேன்

சூனியத்தில் நின்றேனோ சுதந்திரம் இழந்தேனோ
  துடித்துமனம் விழிசிவக்க
நானிதயம் கொண்டேனோ நம்பாமல் எப்போதும்
  நாடியுணர்ந் ததிசயித்தேன்
பாநிதமும் கொண்டாலும் பைந்தமிழை மறந்தவனே
  பாவநிலை விடுமா எண்ணி
வானின் இடி பெய்தமழை வந்தொழிய காணமைதி
 வாய்த்தநிலை கொண்டயர்ந்தேன்

வையக வாழ்விதனில் வாய்த்தநல் லனுபவமே
  வாழ்நெறி ஆசிரியனாம்
மெய்யகத் தெளிவோடு  மனமோநல் லறிவோங்கி
  முழுவாழ்வு முறையுங் கற்போம்
ஐயகோ என்ன விதி அத்தனையும் கண்டறிய
   அடையுமே வாழ்வின் முடிவும்
பொய்யுடலைக் கொள் ஆயுள்  போயினவென் றுயிர்பற்றிப்
  பிணமாக்கும் விதியின்கரங்கள்

போகின்ற பாதைதனும் புரிவதேயில்லை நாம்
  புவிமீது வாழும்வேளை
ஆகின்ற வேளையதில் அறிவென்ப உணர்வோடும்
  அடிக்கடி சண்டை போட்டு
வேகின்ற உடல்மீது வெண்ணையை வார்த்தழலை
  விரைந்துமே கூட்டிவிட்டே
சாகின்ற வேளைவரை தர்மத்தின் விழிகளினை
  தடுத்தின்பம் கொள்ளுமன்றோ

எங்கே நான் போகின்றேன் இதைஅறிவ தல்லேன்  யான்
  எடுக்கின்ற காலடிதனும்
அங்கவளின் சக்தியருள் அகநோக்கில் அமைகவென
   அன்னைதனை வேண்டுகின்றேன்
பொங்குமென் மனம்மீது புன்னகைச் சரம்கொண்டு
   பூசித்து வேண்டிநின்றேன்
எங்கு நான் செல்கின்றேன் இருட்காட்டில் நடக்கின்றேன்
   இறையே உன்னொளி வேண்டினேன்

No comments:

Post a Comment