Monday 9 February 2015

இரவா பகலா ?

மனமது உயிர்தனை வாட்டும் - விழி
மலர்களும் நீர்த்துளி ஊற்றும்
கனமென இதயத்தில் தாக்கும் - சுமை 
கவலைகொண்டுளம் இருந்தாலும்
தினமது மலர்களும் பூக்கும் - அது
துயர் கண்டும் இதழ்கள் விரிக்கும்
வனமதில் வீழ் எழிலருவி - அதன்
வகையினில் கொள் மனம்மருவி
நினைவுகள் கொண்டது வாழ்வு - அதில்
நினைப்பது நடக்கும் முயன்றால்
புனைந்திடும் கலயமும் செய்வோன் - விரல்
பிடித்திடும் வகையுருவாகும்
சுனைமலர் ஆடும் சிற்றலைகள் - தன்
சுதந்திர மெனப் பரந்தோடும்
வினைபடு கலங்குமுன் உள்ளம் - அதன்
விரைவெடு தெளிவுறக் கொள்ளும்’
துயரங்கள் நிலைப்பது மில்லை - அது
தொடர்கதை எனும் மரபில்லை
உயரமும் தாழ்வும் ஓர் பாதை - நடை
உருண்டு வீழ்ந் தெழுவதுன் பயணம்
துயரமும் மகிழ்வொரு தாயின் - மடி
தோன்றி வளர்ந்திடும் பிள்ளை
சுயநிலை மாற்ற முன் வருவர் கணம்
துள்ளி யெழுந்து பின்மறைவர்
வருவதும் போவதும் இயற்கை - நம்
வாழ்வினில் இரவுகள்பகலாய்
தரும் நித மாற்றம் ஓர் பாடம் - இத்
தரணியின் நிலை நிலையாமை
துரும்பென இரும்பதை எண்ணு - உன்
துயரத்தில் கனமில்லைப் பஞ்சு
அரும்பெரும் வாழ்விதை நம்பு - பெரும்
அதிசயம் தரும் இதன் பண்பு
***************

No comments:

Post a Comment