Monday, 19 January 2015

பயணத்திசை

ஆழப் பரந்த அண்டத்தில்
 ஆகாயத்தின் நீலத்தில்
வாழக் கிடைத்த புவிமீது
 வந்தே வாழ்வைக் கொண்டாலும்
வேழப்பிழிறல் செய் வான
 விரைநட் சத்திர வெடியூடே
மாழக்கிடந்த கருங்குழியின்
 மையம்நோக்கி போகின்றேன்

(நான்)
சோழப் பொரியாய் ஆனவளே
  சுற்றும் உலகே சொல்லாயோ
நீளத் தெறித்த ஒளி கண்டே
  நீயும்  அதன்மேல் மோகத்தில்
வாழச் சுமந்த மனிதருடன்
  வானத் தூடே நகர்கின்றாய்
ஏழை இவனுக் கோர்வார்த்தை
  ஏதென் றெடுத்தே சொல்லாயோ

தாயின்மடியில் பிள்ளைக்கோ
  தகுமோர் வெப்பம்தருவள் போல்
நீயின் பத்தை நெகிழ்வோடு
  நெஞ்சில் சூடும்  கொள்ளத்தான்
காயின் வெப்பக் கனல்வீசும்
  கதிரின் பின்னால் நீசுற்றிச்
சாயின்பொழுதின் வரை தந்தே
  சற்றேஇருளக் குளிர்வித்தாய்

மேகத்திடையே நான்காணும்
   மின்னும் தூரத்தப்பாலே
ஆகச் சொன்னார் அண்டத்தில்  
   ஆடிச் சுற்றும் நின்வாழ்வும்
வேகும் வெயிலும் ஓர்நாளில்
  வீணாகத்தான் கருங்குழியில்
போகும் என்றார் சொல்லாயோ
   போவேனா நான் பிழைப்பேனா

(பூமி)
நானே தெளியேன் நல்லுயிரே
  நடக்கும் பாதை இருள்மூட
ஆனேன் அன்பில் ஆதவனை
   அகத்தில் துணையாய் வரிந்திட்டேன்
ஏனோ எதுவும் தெரியாமல்
   இரவியைச் சுற்றி ஓடுகிறேன்
தேனே மனிதத் திரவியமே
  தேவையற்றேன் கலங்குகிறாய்

வானில் தெய்வ ஒளியுண்டு
   வாழ்க்கை தந்தாள் வழிசொல்வாள்
மானில் துடிப்பும் மலர்வண்ண
   மகிமைசெய்தாள் அருள்வேண்டின்  
தேனில் இனிமை ஊற்றியவள்
    திங்கள்மீது பொன்னொளியும்
வேனிற்கால தென்றலையும்
   விசையும் காந்தம் தந்தவள் காண்

ஊனை உடலை உன்னுயிரை
   ஒட்டும் பாசக் கட்டினையும்
மானின் மருளும் விழிகொண்டாள்
   மக்கட் பேறென் றிட்டவளோ
வானில்  வைத்தே உருளென்றே
   வட்டப்பாதை தந்தவளாம்
ஏனில் வாழ்வில் இனிதென்றே
   ஏகும்பாதை காட்டாளோ

ஆக்கும் விதிதான்  இயற்கைதனும்
  அசைவும் வட்டச் சுழல் ஆகும்
ஏக்கம் கொண்டே இரந்தாலும்
  எடுத்தோர் வாழ்வில் முடிவுண்டாம்
போக்கும் உடலும் பின்தங்கிப்  
  பிறிதோர் உடலை உயிர்கொள்ளும்
நீக்கும் உலக வாழ்வோடி
   நிகழும் பின்னோர் சுழலாகும்

காலம் சக்கரம் போல்யாவும்
  காணும் மறையும்  கதி யோட்டம்
நீலப் பெருவான் எழும் நீரும்
   நின்றே வானப் பொழிமழையாய்
ஞாலத்திடையே மீளும்காண்
    நாளும் இரவும் நடத்தல்போல்
கோலமிதுவே இயற்கையெனில்
  கொண்டோர் வாழ்வும் திரும்பாதோ?
            ***
எங்கேயான் போய்க்கொண் டிருந்தேன்
  இரவின் கருமைப் பிரபஞ்சம்
மின்னு மொளியில் எல்லையற்ற
  மேனிக் குளிர்வில் அசைந்தோடி
தன்னில் ஒளியைக் கொண்டவளின்
   தருமத் தேராம் யாக்கைதனைப்
பின்னிப் புவியிற் சிக்குண்டே
  போகும் பயணம் திசையறியேன்

No comments:

Post a Comment