Friday 10 January 2014

பரிமாணம்

மாறும் உலகில் மாற்றம் ஒன்றே
மாறாதென்றே சொன்னார்
வேறும்பலவும் விதியும் மாறும்
விளைவை வாழ்வில் கண்டோம்
கூறும் பலவாய்த் தேகம் கொல்லக் 
கூடும் கூட்டம்  மாறாச்
சேறும் மிடையே நெளியும் புழுவின்
சிந்தை கொள்ளக் கண்டோம்

ஆறும் கடலும் அதிலேயோடும்
அலைகள் மாறக் காணோம்
நாறும் பூவும் நல்லோர் வாசம்
நாளும் கண்டோம் கொண்டோம்
சீறும் புலியும் சிங்கம் தவளை
சிறிதோர் சிட்டுக்குருவி
தேறும் மெலியும் திங்கள் செயலும்
திகழத் தினமும் கண்டோம்
      

ஏறும் போலும் நடைகொள் தமிழர்
இரங்கும் மாற்றம் கண்டோம்
நீறும் பூத்தே நிழலை விட்டே
.நெருப்பி லழியும் தேகம்
சாறும் புளியக், கனியாய் வாழ்வில்
சதையில் மோகம்கொண்டே
கூறும் போடும் மிருகக் கூட்டம்
கொடிதே மாறக் காணோம்

வீறும் கொண்டே வளையா நெஞ்சும்
விருந்தென் றெமனைச்சேர
தாறும் மாறும் சொரியும் குண்டின்
தாக்கம் அழியக் கண்டோம்
தூறும் மழையில் ஓடும்நதியும்
திரைக் கொள்கடலும் இந்நாள்
தோறும் ஓவென் றலறும் சத்தம்
தோன்றும் மாற்றம் காணோம்

ஆயின் உலகில் மாற்றம் ஒன்றே
மாறா தென்னும் போதில்
தாயின் அன்பும் தாரும் வாழ்வின்
தனமும் பொருளும் காணும்
நோயின் வகையும் நிற்கும் உயரம்
நீதி நேர்மை எண்ணம்
போயின் பத்தை தேடும், ஆசை
புலனும் மாறக் கண்டோம்

காயும் பழமாய்க் கனியக் கண்டோம்
காலத்தின் விஞ்ஞானம்
ஆய்வும் பயனாய் ஆக்கும் பொருளும்
அதனில் மாற்றம் கண்டோம்
தீயும் ஒளியும் போலும் அறிவில்
தெரியும் புதுமை வழியில்
ஒயும் வகையென்றில்லா கவிதை
இன்னோர் வளம்கொண்டலென்

புதுமை என்றார் பேச்சை வானில்
போகும் அலையென்றாக்கி
பதுமை போலும் நிழல்கள் ;ஆடப்
படமென் றுயிர்போற் செய்தார்
மதுமை விழிகள் கொண்டோர் ஆளும்
மாற்றம் உலகில் செய்தார்
இது மைகொண்டே எழுதும்கவிதை
இன்னோர் வகை கொண்டாலென்?

No comments:

Post a Comment