Friday 10 January 2014

தமிழ் இனிக்கவில்லையே

        
செந்தமிழ் தேனும் இனிக்கவில்லை - மனம்
தீயில் எரிகையிலே - நல்ல
சுந்தரமோ தமிழ் தோன்றவில்லை உளம்
சுட்டுப் பொசுங்கையிலே
சந்தத்துடன் கவி சேரவில்லை உயிர்
செத்துப் பிழைக்கையிலே -  ஒரு
சிந்தனைக்குள் விடை காணவில்லை தமிழ்
சித்தம் உறங்கிடவே

நந்தவனம் மலர் தென்றல்தொடும் இந்த
நாளில் அதுஇல்லையே -இனி
எந்தமணம் இந்த தென்றல்தரும்  உடல்
சிந்தும்குருதியிலே
அந்திவரும் .இருள் கண்டதென்ன ஒளி
ஆதவன் முன்னெழவே --அது
முந்திவிழுந் தோடிக்கண் மறையும் எங்கள்
மண்ணின் இருள் இல்லையே

சிந்துமெழில் எங்கள் நங்கையர் கொண்டபூம்
பந்தெறிந் தாடலிலே - அவர்
சந்தணவாசமும் கொண்டலையும் தென்றல்
சுற்றிப்  பரந்திடுமே
இந்தநிலைகொண்ட மங்கையரோ பகை
கொண்டவர் இம்சையினால் - நிதம்
சிந்தும் குருதியில் தோய்ந்துடலம் மண்ணில்
சீர்கெடச் சாவதென்ன       

தந்தையன்னை சொந்தங் கொண்டநிலம்  -இன்று
தங்களின் சொந்தமென்றும் - அங்கு
வந்தவர் இல்ல முடைத் தழித்து எம்மை
வீதியில் தள்ளிவிட
விந்தை உலகத்தில் வீறழிந்து- வெட்கம்
வீட்டினுள் தூங்குவதோ  -இனி
சந்தை கடைத்தெரு சத்திரந்தான் எங்கள்
சொந்தங்கள் தூங்கிடவோ

அந்திவரக் கதிர் ஆழிவிழ மணி
ஓசை விண்ணோடிஎழ -பல
சுந்தர மாதர் குழுமிவர நல்ல
சோதிகொண்டே ஒளிரும்
சந்தன மாமலர் சூடியவர் இறை
சங்கரன் கைதொழுதே -அவர்
சிந்தை குளிர்ந்திடச் சொந்தமொடு இன்பம்
சொல்லிக் களித்தெல்லாம்

நொந்துமனம் துயர் கொள்வெனக் கோவில்
நெய்விளக் கேற்றிவைத்து  - சொல்லும்
மந்திரம் மாலை மணி யொலித்தே அவர்
மாமறை யோதுகையில் 
நிந்தை புரிந்தனை என்றுவந்தே இவர்
நீளவெண் ஆடைபற்றி - புல்லர்
அந்தோ பரிகசித் தாடுகிறார் இன்னும்
ஆகட்டும் என்றிடவோ

வந்தவர் வாழவும் கொன்றொழித்தே யெங்கள்
வாய்க்குள் அரிசியிட்டு  =-இடர்
தந்தவர் கொண்ட உயிர்பறித்தும் எம்மைத்
தள்ளிக் குழியிலிட்டு 
சொந்த சுதந்திரம் வேண்டியவர் தம்மைச்
சுற்றியும் வேலியிட்டு -இவர்
மந்தை யினமென்று ஆக்கிடவும் மதி
கெட்டுக் கிடப்பதுவோ

12/3/13
me

No comments:

Post a Comment