Friday 10 January 2014

துக்கமில்லை ஆனந்தம்

மரணமென்னும் முடிவைநோக்கி
. மனித வாழ்வு அடையும் போது
. மனங் கலங்கி அழுதுகொள்வதேன்
கரணம்போடும் வாழ்வில் என்றும்
.  கடைசிஎன்ற முடிவும் உண்டு
.  கருதுமெண்ணம் மறந்து போவதேன்
குரலுங் கொண்டு கதறி யோங்கிக்
. குத்தி மார்பில் ஓலமிட்டும்
. கொண்ட வாழ்வைத் தெய்வம் நல்குமோ
பரவுமாசை நெஞ்சில் கொண்டு
.  பாய் படுத்த மேனி கண்டு
.  பயனுமின்றிக் குரல் கடுப்பதோ
 

வரவும் பின்னர் செலவுமென்று
.  வானெழுந்த தெய்வம் நின்று
.  வகையறிந்து செய்த வாழ்வைய்யா
தரவுந் தந்த பின்பறித்துத்
.  தரையில் போட்டும் உடலழித்து
.  தாயைத் தாரம் தம்பி தங்கையை
பரவ நெஞ்சில் பாசமென்னும்
.  பரிவுகொள்ள மாயம் செய்து
.  பிரிவு சோகம் தீபொசுக்கிட
புரவும் மேகம் தொலையும் வானில்
.  போய்ப் பறந்து விண்ணிலேகும்
.  போலும் வாழ்வை கொள்ளவிட்டவள்

கரமும் இரண்டு காலுமீந்து
.  காதல்கொண்டு வாழ்ந்து பின்னர்
.  கடைவழிக்கு உயர வாருங்கள்
துரவும் மேடுபள்ளமென்று
,  தொடரும் துன்பம் பலபடைத்து
,  தோல்வி யென்று வாழ்வைக் கண்டபின்
உரசும் தென்றல் உள்ள வானில்
,  உலவுமேகம் தொட்டுப் பின்னர்
.  உதயமாகும் ஒளியைத் தாண்டியும்
வரமுமீந்து  வழியுமாக்கி
.  வாழ்வு மென்று மொழியும்பேசி
.  வதைபட்டான நிலையில் மீட்பவள்

அரண்டு மாயை  அழகுஎன்றும்
. அவனிமீது அறிவுமற்ற
. இருளின் போதை எம்மை வாட்டவும்
பரமஞான ஏழைகண்டு
.  பரிவுகொண்டு  இன்னல்நீங்க
. பயணமாகு என்று சொன்னவள்
மரமுமாக்கி மலையுமாக்கி
.  மதியினோடு அனல்செறிந்த
.  மழையின்மேகம் மூடும் கதிரையும்
சிரமமின்றிச் செய்த சக்தி
.  சேரும் ஆன்மபந்தம் கண்டு
.  சிறந்ததென்று  சிந்துபுன்னகை
.
**********************

No comments:

Post a Comment