Friday 10 January 2014

நம்பிக்கை ஒளி

கொட்டுங்கள் வட்ட முரசெடுத்து வந்து
கூடிநின் றாடுங்கடி ஒரு
திட்டமிருக்குது நெஞ்சுக்குள்ளே அதை
தட்டிப் பெருக்குங்கடி
தெட்டத் தெளிவெனச்  சேதி சொல்லும் அதோ
சிட்டுக் குருவியடி அது
நட்டமரத்தின் கிளையிருந்து சொல்லும்
நல்லுரை கேளுங்கடி

பட்ட துயரெல்லாம் போய்விடவே - நல்ல
பாதை திறக்குமடி - அதில்
சட்டென தீரமும் கொண்டெழுமாம் அந்தச்
சூரியன் தோன்றுமடி - இனி
தொட்ட தெல்லாம், எழிற் பொன்னிலங்க ஒரு
தோற்றம் பிறக்குமடி - துயர்
விட்டுவிடு துன்பம் நீங்கிவிடும், அந்த
வேளை வருகுதடி

சுட்டவர்  தொட்டவர்  தோற்றுவிட எங்கும்
சோதி பெருகுமடி - உயர்
வட்டப்பரிதியின் வெம்மையிலே பனி
விட்டுக் கரையுமடி - அந்தச்
சட்டம் திகைத்திடச் சங்கதியும் ஒன்று
சுற்றிப் பெருகுமடி - கையும்
எட்டத் தொலைவெனும் ஏற்றத்திலே கொடி
என்றும் பறக்குமடி

மொட்டு மலர்வதென் றின்பமுடன்மனம்
முற்றும் திகழுமடி அது
உற்ற சுதந்திரம் கண்டதனால் அன்பு
உள்ளம் சிரிக்குமடி
பொட்டும் நிலைத்திட பெண்மணிகள் கையில்
பூகொண் டிருப்பரடி - சிறு
குட்டி குழந்தைகள் தன்மடியில் கொள்ள
கூடிக் களிப்பாரடி

தட்டி முரசொலி சங் கொலிக்கத் தமிழ்த்
தேசம் பிறக்குமடி - அதில்
கட்டுவது கைகள் என்பதல்ல உள்ளம்
காணும்நல் லன்பையடி -இனி
வெட்டுவதும் தேகக் கட்டுமல்ல விழி
வெட்டி குலவலடி - அங்கு
கொட்டிக் குவிப்பது இரத்தமல்ல தமிழ்
கொண்ட இறைமையடி

No comments:

Post a Comment