Friday 10 January 2014

ஆயிர மாயிரம் அழுத விழிகளைஅரவணைக்கத் தவறிய உலகம்

(தலைப்புக்கு கவிதை)
தெளிந்தவானில் தோன்றும் திங்கள்
தேயும் பின் முழுதாகும்
நெளிந்த நீரலை ஓடும் கடலில் 
நெகிழும் பின் எழும் ஓங்கும்
ஒளிர்ந்து வானடி வீழ் கதிரோனும்
உதயம் காணும் ஏற்றம்
விழுந்த எமதினம் எழுந்து விடாது
வதைக்கும் உலகின் போக்கும்

தணிந்த வருடிய தென்றல் தானொரு
தருணம் கடும் புயலாகும்
பணிந்து மலையிடை தவழும் மேகம் 
பட படவென இடிமின்னும்
அணிந்து முடியொடு அரசை ஆண்டோம்
அந்நியன் வந்தே  கொல்ல
துணிந்த தமிழனை தொட்டழி என்று
துட்டரை போற்றிய உலகம்

வெளுத்த முகமுடன் விழிநீர் ஒழுக
வாழ்வை தாவெனக் கேட்டோம்
கழுத்தில் வெட்டியும் குழிகளை மூட க்
கதறித்  துடித்தோம் தேகம்
பழுத்த கனிகளும் பிஞ்சாய் காயாய்
பாலர் சிறுவர் பெண்கள்
விழுத்தி வதைப்பதில் வெந்துயிர் கொல்ல
வேடிக்கை  பார்க்கும் உலகம்

அழுதோம் ஆயிரம் ஆயிரமாக
அலைந்தோம் கதறிக்கேட்டோம்
எழுதும் விதிகளைக் கொள்ளும் உலகம்
எம்மினம் கொல்லும்வேளை
நழுவியதேன் அரவணைக்கக் காத்தோம்
அணையா தணையும் என்றார்
எழுமெம் தமிழ்காண் ஒருநாள்விடியும்
இயற்கை தமிழே வெல்லும்

***********************

No comments:

Post a Comment