Tuesday 16 July 2013

விட்டு விடலாமோ?

புன்னகைப்பூ சென்றதெங்கே பொன்னிலாவே- நீயும்
போகும்பாதை இன்னலென்ப  கொள்வதாலே
என்னகத்தில் வாடும்பூக்கள் கொள்ளக் காணே - இனி
என்னசெய்தும் மீண்டும்பூக்க வைப்பேன்நானே
கண்ணசைக்கக் காவியங்கள் நூறு காண்பை - இன்று
காலமென்னும் மேடை கண்டும் ஆடுகின்றேன்
பண்ணிசைக்க பாதம் தூக்கி ஆடுவேனோ - இல்லை
பட்டதுன்ப மெண்ணி மூழ்கித் திக்குவேனோ

சின்னவன்கொள் என்னிருந்தும் வெண்ணிலாவே - நீயும்
செல்லும் எந்தன்பாதை கண்டு சேர்ந்துவந்தாய்
மின்னல் கொண்ட மேகம் நின்னை மூடிநின்றால் - அதை
மெல்லத் தள்ளி விட்டுத் தென்றல் ஒடுமாமோ
மன்னனேம ரகதப்பொன் மஞ்சள்வானில் - அந்த
மாலையின் நிலாவென்றாகிப் பொன்ரதத்தில்
இன்பமே கொள்ளென் றுபூமி உன்னதத்தில் - மேலும்
ஏற்றம் கொள்ளச் செய்குவை ஒளிச்சரத்தில்

தண்ணிலாவே என்ன உண்டோ என்கரத்தில் - நானும்
தந்துவாழ அன்பொன் றுண்டு யென் மனத்தில்
கண்ணிலாத கால்கள் செல்லும் கல்லிடிக்குள் - அந்தக்
கண்கள் சேரின் காண்வழிக்கு முன்னிருட்டி(இ)ல்
எண்ணும் பாதை நான்நடக்க உன்னொளிக்குள் - எண்ணம்
இல்லையென்ற வாழ்வே யில்லை என்வரைக்குள்
மண்ணுலாவும் எந்தன்வாழ்வு மானுடத்தில் - என்றும்
மாளுமட்டும்  உண்டே உண்டு நின்னொளிக்குள்

********************

No comments:

Post a Comment