Wednesday 31 July 2013

உயிர்ப்பு

ஓடிவிட வாஎன்றே உயிர் எழுந்து கேட்கும்
ஓவிடுவே னாஎனவே உடல்சினந்து நிற்கும்
தேடிவர வாஎன்று தீகடைக் கண் பார்க்க
தேவையிலைப் போவென்று தென்றலதை ஊத
ஆடிவிழ வாஎன்றே அசையுமிரு காலும்
ஆனந்தமாய்  நடனமிடும் அழகுடலும்கண்டும்
பாடிஒரு கவிஎழுத பாவியிவன் முனையப்
பாருங்கடா இவனையெனப் பரிகசிக்கும் விதியோ

மூடிவிடவா என்று மூச்சுப்பை கேட்கும்
மோகமுடன் ஆசைவிழி மூச் சென்று அடக்கும்
மாடியினில் வாழுபவன்  மதியிழந்து தூங்க
மாயமனம்கூறுங்கவி மழையும் நின்றதாக
வாடிவிழும் பூஎனவே வாழ்வில் இதுகண்டால்
வசந்தம் மலர் தேடியிவன் வானம் புகுவானோ
நாடி விழுந்தாலென்ன நடை தளரவில்லை
நான் வணங்கும் சக்தியவள் நலம் பெற்று வருவேன்

காலைமலர் பூக்கவில்லை கனவுகளும் வெறுமை
கனியிழந்த சோலைமரம் காக்கை பட்சியில்லை
சோலைக்குயில் கூவவில்லை சுற்றிவருங் கோவில்
சுடர்தீபம் ஆடுவது சுழல் காற்றின் தொல்லை
வாலைமகள் பாடுங்குரல் வயற் காற்றிலில்லை
வந்த இளங் காற்றும்முகம் வருடும் குணமில்லை
மாலையிருள் சூழின்ஒளி மறைவதென்ன புதுமை
மறுபடியும் உதயம்வரும் மகிழ்வுகொள்ளக் காலை

No comments:

Post a Comment