Wednesday 27 August 2014

இடைவெளி


தமிழ்தனை மறந்திடத் தரவுகள் மறுத்திடும்
தகமையைப் பெறுவதுண்டோ
குமிழென அலையிடை கொளும் வடிவுடைவென
குறுகியும் சிறுப்பதுண்டோ
அமிழ்திலுமினியது அகமதில்  சுவைதமிழ்
அவனியில் வெறுப்பதுண்டோ
நிமிர்ந்திட சிலதடை நினவுகள் கழிகின்ற
நிதர்சன இடைவெளியோ

பலவித நினைவுகள் பறிமுதலிட விதி
பகலிடை ஒளிநிலவாய்
புலமைகள் சிறுபட புதுமைகள் தலைப்பட
பொழிதொன்று கழிகிறதோ
குலமொளிர் மனமதின் குணநலம் புரியுதல்
குறையெனை இருந்துவிடில்
சலசல அலைகளில் சதிரிடும் ஒலியென
சலனங்கள் எழும் இதுவோ

வலதுகை எழுதிட வருவது இடதுகை
வரைமுறை அறிவதில்லை
பலமது புஜம்கொளப் பதறிடும் பாதங்கள் 
பகைவனுக் குலகல்லவோ
நலமென இருவிழி நடுவழி இடர்தனை
நிகழ்வினில் புரிவதுண்டு
விலகியும் ஒருவிழி வெறுமையை காணென
விலைதரும் செயல் அழகோ

துலங்கிடும் ஒளியது தரும் பொருள் மறைத்திடின்
தொலைவது எழிலுலகே
நலமொடு இருப்பது நடந்திட அருள்தனை
நல்குவ தவள் தனியே
கலகல சிரிப்பெழக் குழந்தையின் குணமல்ல
கொடுவெயி லெரிகிறதே
சில சில அமைதிகள் செறிவென இருந்திடில்
சடவென அதிர்வெழுதே

வழித்துணை யல்லப் பெரு வழக்கமென் றிணைந்தபின்
வகுப்பது கழித்தலொன்றே
குழிக்குள்ளும் விழுத்திடும் குவலயத்திடை மனம்
கொடுப்பது கரமல்லவே
விழிப்பது விழியல்ல வெகுமன மெனிலதை
விகடமென் றெடுத்திடவோ
செழிப்பது பயிரெனில் சிறிதெனும் உயிர் வகை
சிரித்திட நசுக்குவதோ

No comments:

Post a Comment