Wednesday 27 August 2014

ஒளி தேடும் உள்ளம்


வெண்ணொளி கொள்ளெரி வெய்யவனின் கனல்
வீறுடன் எழுமோர்காலை
கண்ணொளி முன்விரி காட்சிகட் புலனிடை 
கைதொட மீட்டிடும் வீணை
மண்ணிடை தோன்றிடும் மாயவி நோதங்கள்
மெல்ல விரித்தியல் அன்னை
எண்ண மெனும் ரதம் ஏற்றிவிட்டாள் மனம்
ஏறிக் கடந்தது விண்ணை 

மண்ணிடை பூத்தன மாமலர்கள் மது
மாந்தியதோ மனபோதை
பெண்ணின் துணைதரும் பின்னல்இயற்கையின்
பாசமெனும்  நீரோடை 
தண்மை தனில் சுடும் தாகம்,எடுத்திடும்
தன்மை யுடன் இகவாழ்வை
எண்ணியுளம் சிலிர்த் தோடிப் பறந்திடும்
இன்பமிதோ எனும்வாழ்வை

சுண்ண மெடுத்திடை பூசியதாய் நடை 
சோர்ந்து கிடந்திடும் மேகம்
வண்ணமலர்ப் பொழில் வாவியில் நீந்திடும் 
வட்ட அலைத்தா மரையும்
கிண்ண மதில்தொடக் கொட்டியதாய்ச் சிமிழ் 
குங்குமச் செவ்வடிவானில்
திண்ணமெடுத் தழல் தீயெரி வானிடைச் 
செம்மைகண்டே அசைந்தாடும் 

புள்ளினம் துள்ளிடுங் காலை  புதுமணம் 
பொங்கும்  சுதந்திரக் காற்றும்
அள்ளியிறைத் திடுநீரும் வயலிடை 
ஆடும் கதிர்களின் நாணம்
கொள்ளை யிடும் மனமாற்றம்  அதனிடை 
கூவும்குயில்களின் தோட்டம்
எண்ணவுள்ளே மனம்கொள்ளுந் துயர்விட
இன்பமென்றேமனம் ஆடும்

துள்ளி விழும் அலைக் கூட்டம் கரைதனை 
தொட்டகணம் விட்டோடும்
வெள்ளி மலைகளின் வீறும் கொள்திடம் 
வேண்டியதோ மனதீரம்
தெள்ளென நிர்மல வானடியோரத்தில்  
தோன்றிடுதோ மழைமேகம்
.உள்ள கலை உணர்வோங்க இயற்கையின் 
ஓங்குமொளி தனை வேண்டும்

No comments:

Post a Comment