Wednesday 27 August 2014

அறிவொடு துணி!

      

கட்டுகடங்கா திடம்கொண்ட நற்
காளையர் கன்னியரே- துயர்
பட்டுத்தெளிந்திடல் பயனன்று முன்
பார்த்துச் செல்வீரே
தட்டுபடுவது கல்லென்றால் அதில் 
தாங்கா வலிகொண்டு
கிட்ட கால்செலும் நிலை முன்னே அக்
கேட்டைத் தவிருங்கள்

சொட்டுங் குளிர்மழை மேகம் வரும்- அதன் 
சில்லென் றுணர்வோடு
விட்டுத் தெளித்திடும் நீர்த்துளிகள் - அது 
விந்தை மகிழ்வாக்கும்
சட்டசடவென இடி முழங்கும்  அதைச்
சற்றும் எதிர்பாரா
அட்டத் திக்கிலும் கதிகலங்கப்  புயல் 
அமளிப் படுத்திவிடும்

மொட்டும் பூக்களும் நிறைசோலை தனும்
மேதினி வாழ்வல்ல
வட்டப் பூவிடை தேனுண்ணும் ஓர்
வண்ணப் பூச்சியதன்
பட்டுபோலும் மென்மைகொளும் எழில்
பாங்கும் இதுவல்ல
முட்டித் துயர்தரு மாவிலங்கும் வழி 
முன்னால் தெரியும் பார்

தொட்டுக் கொண்டபின் தொலையும் என்றே
தீமைக் கரு`மை`யில்.
விட்டுக் கைகளை மாசாக் காதே
விளவைப்  பார் தீமை
கொட்டிக்  கரங்களில் திட்டுதிட்டென
கொள்ளும் அடையாளம்
பட்டுப் பாடென ஆகிய பின்னால் 
பயனென் இலையாகும்

முட்டக் கொம்பொடு  மோதும் எருதுவும்
மூர்க்கத்துடன் வாரில்
கிட்டத் தெரிந்திடக் கட்டிப்புரள்வதை
கைகொண்டால்  நீயும்
நட்டந் தனையே நல்கும் விலகிடு
நாளும் பொழுதோடும்
திட்டந்தனை நீமாற்றிக் கையெடு
தெரியும் இலக்காகும் 

அச்சம் படுமிடம் ஆயின் அஞ்சுதல்
அறிவுக் கிடமாகும்.
துசசம் செய்ததை தூசென்றெண்ணிடில்
துயரம் வரக்கூடும்
உச்சம் எதிரியின் பக்கமென்றிடில்
உள்ளத் தெளிவோடு
நிச்சயம் வெற்றி என்றோர் வழியை
நிறுத்தி உள்தேடு

அச்சமென்பது மடமையெனில் அது 
அறிவின் துணையோடு
உச்சிப்பெரு வெயில்  எரியும் அதுபோல் 
உள்ளக்கனல்கொண்டு
பச்சை புல்வெளி பரவும் காற்றும் 
புயலென் றாதல்போல்
நிசயம்வெற்றி உனதே கேள்நன்
நெறியிற் வாழ்வாக்கு

No comments:

Post a Comment