Friday 13 June 2014

இதயம் அழுமோசை

எங்கள்வானம் ஏனோ இன்னும் இருண்டே கிடக்கிறது
இதயம் எல்லாம் இரும்பாய் கண்டே ஏங்கித் தவிக்கிறது
பொங்கும் கடலும் புரண்டே ஓடிப் புலம்பித் திரைகிறது
போதில் அலையும் காற்றும் புயலாய் பொங்கித் தணிகிறது
கங்குல் போயும் காலை தோன்றக் கதிரும் மறுக்கிறது
கருமை இருளும்கயவர் நெஞ்சில் கனலை எரிக்கிறது
மங்கும் அறிவும் மதமும்கூட மனிதம் அழிகிறது
மாமணி தேசம் மலர்கள் கொன்று  மகிழும் அவலமிது

திங்கள் தோன்றும் வானில் மேகம் தனியே திரிகிறது 
தோன்றும்,மதியும் தேயும் பிறையாய் தினமும் குறைகிறது
தங்கம் என்றால் தரையில் வீசும் தன்மை பெருகிறது
தாங்கா நெஞ்சும் தவித்தே அழுதும்  தலைதுண் டாகிறது
அங்கம் வெட்டி அழித்தோர்  கேடு அறமென் றாகிறது
அன்பைத் தேடும் உள்ளம் நொந்து அழிவில் முடிகிறது
சிங்கம் முயலை தினமும் கொன்று தின்றே களிக்கிறது
சொல்லும் விதிகள் சட்டம் ஆக்கிச் சுழலும் உலகமிது

சங்கம் கண்டோர் தமிழும் தலையைக் குனியக் காண்கிறது
செங்கள வீரச் செம்மல் ஏற்றும் செய்யுள் சிரிக்கிறதே
அங்கம் வெட்டி அழிவேன் என்றாள் அன்னை பாலகனும்
அரும்போர் கண்டோன் இதயம்ஏற்கா அம்பென் றாகும்கால்:
மங்கை மேனி மரணப் பாயில் மாற்றான் வீழ்த்தக்காண்
மானம் கெட்டே மருளும் மனமும்  மடமை நிலையன்றோ
எங்கும் துன்பம் ஏகம் ஆகி  இயல்பில் பிறழுங்கால்
ஏனோ எம்மால்  இயலாதென்றோர் எண்ணம் சரியாமோ

பங்கம் இன்றிப் பனிநீரோடை பரவும் இனிகாற்றும்
பகலில்  ஒளியும் இரவில் கனவும்  பார்த்துத் கொண்டேபின்
தெங்கும் ஆடத் திங்கள் மிளிரும் தென்றல் கதைபேசும்
தினமும் எழிலார் திகட்டா துய்க்கும் தேனில் இனிவாழ்வை
மங்கும் இனமும் மாண்டேபோகு மதனின் முன்காண
மனமும் வேண்டில் மனதில் என்றும் மதிநுட் பத்துடனே
பொங்கும் அருவிப் புனலென்றோடிப் போற்றும் புதுவாழ்வை
பொன்னேர் தமிழும் தன்முடிகொள்ளப் பாரா துயிர் போமோ

No comments:

Post a Comment