Monday, 16 June 2014

நிலவின் கோபம்

மன்னவன் பஞ்சணை தூங்கிய நெஞ்சினில்
மஞ்சம் கசக்கக் கண்டான்
அன்ன மென்மையுடன் ஆடுந் தோகைநடம்
யாருக்கு வேண்டுமென்றான்
புன்னகை மாதரின் கையிடை பந்தெனப்
பட்டுத் துடித்ததெல்லாம்
என்னவை இந்திர லோகத்தின் ஊர்வசி
ரம்பையோ என்றழிந்து

மென்னகைப் பூவிதழ் ஓத்தடம்கொண்டது
மேனி சிலிர்த்த தெல்லா0ம்
பின்நகை பூத்துச் சிரித்தபடி அவன்
பின்வழி மாடம் சென்றான்
பொன்னெழில் வாரிப் பொழிந்த நிலா வானிற்
பேசல் எதுவுமின்றி
தன்னொளி வீசுமப் போதினிலே உடல்
தன்னில் தவிப்பெழவோ

மின்னிடும் வெண்ணொளி கொண்டும் துயர்பட்டு
மேனி மெலிந்ததுவாய்
தன்னிலை யும்கெடக் கண்டவன் நெஞ்சினில்
தாபம் நிறையக் கண்டான்
சின்னவளே நீயும் தென்றல் தொடும்வேளை
செல்லநடை கொள்ளினும்
என்னது காணலில் துன்பநிலை கொள்ள
ஏதுண்டோ ஏகாந்தமோ

உன்னெழில் விட்டுமுன் மன்னவன் செல்லிடம்
ஏதென் றுரைத்திடுவாய்
அன்னவன் எங்கணும் உள்ளனனோ என
அற்பனைக் கண்டு கொள்வேன்
பொன்னொளி தேயும் நிலை கடந்தே உன்னைப்
பூரண தோற்றமுடன்
தன்னந்தனி வானில் செல்லும் துயர்களைந்
துன்நிலை மாற்றிடுவேன்

சொன்னதும் வானிடை வந்தமுகில்மடி
சென்று விழுந்தநிலா
என்னவிதம் நீயும் எண்ணமெ டுத்தனை
என்று சிரித்தவளோ
கன்னமிடும் மனம்கொண்டு மாதரெழில்
கண்படக் கொள்வதன்றி
வன்மை மனங்கொண்டு வாழுங்குடி கொல்லும்
வக்கிர மானவன்நீ

என்னுடை மக்களை கொன்றதுண்டோ உந்தன்
எண்ணம் பிழைத்ததென்றான்
அன்னிய தேசத்தில் ஆசைகொண்டே அதை
ஆக்கிரமித்தவுடன்
மென்மைகொள் பெண்டிரின் மேனி வதைசெய்யும்
மேன்மையுடை அரசே
என்ன புதுமை நின்பஞ்சணையில் மட்டும்
இச்சை தவழ்வதென்ன

பொன்னும் மணியுடன்  பட்டிலுடை கொண்டு
புன்னகையில் மயங்கி
தின்ன மதுகொண்டு செல்வமெனக் கொஞ்சி
தேன்நில வென்றவளைத்
தன்னலம் கொண்டு தவிததவள் பார்வையில்
தன்னை யிழக்கும் உன்னை
என்னொளி தந்துமுன் தேசம் திகழ்வது 
எத்தனை பாவம் என்றாள்

சின்னஇடை மாதர் சூழுலகெங்கணும்
சென்றிடும் தேசமெல்லாம்
அன்னை படைத்த ஒர் அற்புதச்  சித்திரம்
ஆக்கி உயிரளிப்பர்
பன்மடங்காகிட பாலர் குழந்தைகள் 
பல்கிப் பெருகவைக்கும்
உன்னத மாதரை உன்கொடு வாள்கொண்டு
எப்படி நீயழிப்பாய்

என்ன விலங்கினம் ஆயினும் தன்னினம்
என்னில் அழிப்ப தில்லை
சின்ன றிவுதனைக் கொள்ளினும் ஓரினம் 
சென்று அதனினத்தை
வன்மை எதிரணி வாழும்நிலம் எந்தன்
விட்டொழி என்றலறி
மென்மை கொண்டவரைத்  தாய் தங்கை பிள்ளையர்
மேனி கெடுப்பதில்லை

மன்னவனே உந்தன் மாசுகொண் டோர்படை
மண்ணில் பெரும் இழிமை
தன்னலப்  பேய்களின் தாகம் உதிரம் கொள்
தன்மையில் பேய்கள்படை
புன்மைகொள்ளும் உந்தன் தேசம் வந்தேகொண்டேன்
பாரில் பெரும் பழியை
சின்னவனே நின்றன் பாவ மண்ணில்காய்ந்து
கொண்டேன் மென்மேலுங் கறை

No comments:

Post a Comment