Monday 16 June 2014

ஒன்றுமே யில்லை

உலகம் என்பது ஒன்றுமில்லை -ஓரு
ஒளியின் பிம்பங்கள்
கலகம்  என்பது வேண்டாமே - அவை
காட்சிக் கனவுகளே
விலகும் உயிரின் வீடெங்கே -அதன்
வேண்டிச் செல்வதெங்கே
உலவும் வரை நாம் காண்நிழலோ - வெறும்-
உலகக் கனவுகளே

உண்மை யென்றால் பிணமாகும் - போ
துள்ளோர் வெம்மைதனும்
தண்மை கொள்ளப் போவதெங்கே - அதன்
தலைமைத் தீயெங்கே
பெண்மை செய்யும் பிறப்பென்றால் - அப்
பிறப்பின் கட்டளைகள்
விண்ணில் இருந்தே வருகிறதா - அதன்
வெம்மைத் தொடர்பெங்கே

கண்ணில் தெரிவதென் ஒளிபாய்ந்தே - உள்
காணும் திரைமீது
எண்ணத் துளிகள் இயக்கிவைக்கும் - ஒரு
இன்பக் காட்சிகளே
வண்ணக்கோலத் திகழ்வெல்லாம் - ஓர்
வானத்தெரி வில்லாய்
வார்த்தை ஜாலத்தெறி சத்தம் -சேர்
வாக்கும் மாயைகளே

பிறப்பும் இறப்பும் ஏதறியோம் - இப்
பாசங் கொண்டன்பில்
கிறங்கும் பருவத் தெழில்மேனி - மதன்
கைவில் மலரம்பும்
உறங்கும் மேனிப் பிணைப்புடனே - நாம்
உருகும் சிற்றின்பம்
திறமை புகழும் தேசமெனும் - நம்
தேகக் கிளர்வெல்லாம்

முதுமை கொள்ளக் கனவாகி - நம்
முடிவை நோக்குகையில்
பதுமை யாகிக் கிடப்பதுவும் - தீ
பரவச் சாம்பலென
வதுவை செய்தே வாழ்ந்திட்ட - பல்
வகையாய் தித்தித்த
மதுவாய் இன்பம் துய்திட்ட - மலர்
மேனிக்காவதென்ன

படகில் செல்லும் பிரயாணம் - நம்
பக்கத் துணையுடனே
கடக்கும் ஆற்றின்நடுவினிலே-  அது
கவிழ்ந்தே போனாலும்
திடமாய் ஒருவர் பிழைத்திடுவர் - தேர்
என்றே விதிகூறின்
விடவும் உயிரைத் துணிவார் யார் =- துணை
வாழச் சிதைவாயா

பாசம் என்றால் பற்றுதலும் - தீ
பற்றிக் கொள்மேனி
வாசம் கொள்ளும் தீச்சூட்டின் - வகை
வீச்செழும் தொழிற்பாடே
நாசம் செய்யும் நிலையென்னில் - அந்
நாட்டம் கொள்ளுறவின்
வேசம் கலையும் வெறுப்பாகும் - தன்
வழியை திடமாக்கும்

யாவும் போலிநாடகமே - இந்
நாளில் நாம்காணும்
மேவும் இன்ப வாழ்வெல்லாம் - ஒர்
வெள்ளித் திரைக்காட்சி
தூவும் மழையின் மின்னலிடி - அங்கு
தோன்றும் பெரு வெள்ளம்
தாவும் நதியாய்க் கடல்சேர்ந்தால் -இடி
மேகம் பொய்யன்றோ

No comments:

Post a Comment