Monday 16 June 2014

ஆடும் கலைஞன்

ஆட்டமென்ன ஆடும்வரை ஆடுவேன் -நான்
ஆண்டவன் கைப் பம்பரமாய்  சுற்றுவேன்
கூட்டமென்ன கூறினும் நின்றாடுவேன் - நான்
கொப்பிருந்து கொப்பில் தாவி ஓடுவேன்
நாட்டமென்ன ஞானமதின்  கூட்டுத்தான் - அந்த
நாள்வரையும் கேலி கூத்து ஆட்டம்தான்
வீட்டினிலே வெறுமை கண்ட வேட்கைதான்-  இன்று
வேதனையில்  விதி நடத்தும் வேட்டைதான்

கோட்டையிலே கூத்தடிக்கும் மன்னவன் - நான்
கொண்டதிலே சூனியத்தின் காவலன்
போட்டியிலே  புலமையற்ற நாவிலன் இன்னும்
பொய்மை கூறும் ஆற்றலற்ற கேவலன்
பாட்டினிலே ராகமின்றிப் பாடுவோன் -அவை
பார்த்திருக்கத் தப்புத்தாளம் போடுவோன்
வாட்டியவர் வெஞ்சினங்கள் கூட்டுவோன்  கொண்ட
வாழ்க்கையிலே  வேடிக்கைசெய் விநோதனன்

நாட்டியத்தில் நானு மோர்கோ மாளிதான் - நல்ல
நாலு கலை தேர்ந்திடாத  பாவிதான்
பூட்டிவைக்க ஏதுமில் லப்பாவிதான் - என்
புன்னகையில்  கோணும் மனம் நூறுதான்
சூட்டினிலே சோதிபெற்ற  மீதிநான்  - பதில்
சொல்ல வந்தால்நாஉழறும் பேடிதான்
ஆட்டிவைக்கும் சக்தி கொண்ட அன்புதான்  - அவள்
அரவணைக்கும்  வரையிலாடும் பொம்மைதான்

No comments:

Post a Comment