Monday 16 June 2014

சக்தியின் ஊற்றே !!!

வித்தகிதேவி விதைத்தவள் நிற்கையில்
  வித்தினைக் குறையிடலாமோ
சத்தமும் தந்தவள் சத்தியமாகிட ச்
  சித்தமு ரண்படலாமோ
செத்தவனாகிக் கிடந்தவன் மீதொரு
  சக்தியைத் தந்தவள் தானே
எத்தனை நாளெனஎண்ணிய மேனியும்
  இத்தரை காண்கையி லேனோ

குத்தகை தந்தவள் கேட்கவிலை யெனிற்
 கொண்டதும் என்னுடை யாமோ
புத்தொளிக் கூடமும் பற்பல கீதமும்
  போய்க் கொள்ளென் றாக்கிய தேனோ
வித்தைகள் யாவையும் வேடிக்கையாக்கிட
  வேதனைப் படயிவன் யாரோ
நித்திய வாழ்விலை  நிற்கிறவரையிலும்
  நீயென்ன யாரெனலாமோ

புத்தகமோ பல பொற்கிழியோ இவன்
  போகும் வழிக்கினி இல்லை
சுத்தமெனும் மனம்கொண்டதென்ன ஒரு
  பித்தனைப் போலிவன் கல்லை
வைத்தவன் தட்டிச்சிலை வடித்தான் அந்த
 வானமே கலைதனுக் கெல்லை
எத்தனை எண்ணினும் ஏடுதனில் அவள்
  இட்டவை தானே கற்கை

பத்தெனக் கூறிப் படித்திடும் வேளையில்
  பத்தை யுணர்ந்திடவேண்டும்
புத்தியிலே ஒளி பட்டுவிடா தெனின்
  பத்தும் இருள்கொளப்  பார்க்கும்
சக்தியின் விண்ணொளி பட்டுவிடாதெனில்
  சந்திரனே மதி யென்றும்
எத்துறை யாயினும் ஏதுநடப்பினும்
  எம்மனம் சக்தியின் ஊற்றே !

No comments:

Post a Comment