Monday 16 June 2014

எந்தன் நெஞ்சம்

சொல்லக் கொதிக்க வில்லை நெஞ்சம்  - ஒரு
சூடும் உணர்வுக் கில்லைப் பஞ்சம்
செல்லக் கருதும்வழி தேடும் - மனம்
சேரக் காலில் வலிவேண்டும்
மெல்லக் கறுக்கும் அடிவானம் -  அந்த
மேகத்திடை ஒளிரும் திங்கள்
இல்லைக் கருமை கொண்டதேனோ  - இது
ஏனோ அமாவாசை தானோ

பல்லைக் கடித்தும் சினமில்லை - இந்தப்
பார்வை அனல்பறக்கவில்லை
வெல்ல நிலையெடுக்கும் தன்மை - அந்த
வீறின் எழுச்சியிங்கே இல்லை
பொல்லைப் பிடித்தகுனி நடையும்  - அங்கு
பேசுந் திருமொழியில் குழைவும்
கல்லை நிகர்த்த மனம் மீது  - இறை
 காணக் கொடுத்து வைத்ததேது

மல்லுக் குகந்த இளமேனி - அது
மாறிக் கிடக்கு துயில்மேவி
வில்லுகிணை கூரின்பார்வை  - அது
வெளுத்துக்கிடப்பதென்ன, மேனி
வல்லோர் எரியுந் தீகொள்ள  - உடன்
வாவென் றழைக்கும் விதி சொல்ல
கொல்லக் கணங்கள் எண்ணும்போது இங்கு
கொதிப்ப தெப்படியோ கூறு

முல்லைக் கொடிபடர்ந்து பூக்கும்  அதன்
மோகமலர் வழிவை நோக்கும்
செல்லக் கிளி யிருக்கும் கூட்டில் - அங்கு
திறக்கும்  கதவுமொருநாளில்
அல்லல் படும் உயிரென்றோடி  - அது
அடுத்த பெருவெளியை நாடி
இல்லம் எனும் உயிரின் ஜோதி  அதில்
இணையும் வரை கொதிக்கும் நெஞ்சம்

இடது வலதும் என ஓடும் -  பின்
இடமும் மாறிமேல்கீழும்
தொடவும்  உணர்வு குதித்தோடும் - பின்
தொலைவென் றிழுத்து  எங்குமோடும்
குடமும் எனக் கொள்ளும் குருதி அதை
கூட்டி இழுக்கும் விசை தூண்டி
நடமும் கொள் இதயம் சூட்டில் - ஒரு
நாளில் கொதித்திணையும் தீயில்

No comments:

Post a Comment