Wednesday 17 April 2013

காப்பாய் சக்தி !

நடந்தோடி நின்றதெது கால்கள்தாமோ
நாடி மனம் கூடியதென் னாவல்வீணோ
படர்ந்தோடி சுற்றுவது கொடிகள்தானோ
பார்முழுதும் பாசமுயிர் பிணைத்த தேனோ
கடந்தோடி வரும் புயலும்காற்றும் போலே
காலமெனும் ஆழிசுழன்ற லைந்த வாழ்வோ
விடந்தேடி உண்டதென வினைகள் சூழும்’
விதந்தானோ விடிவற்றுப் போமாம்நாளோ

உழுதோடி விதைத்தாலும் உரிமையின்றி
உண்ண வழி மண்ணிழந் தறமும் இன்றி
தொழுதோடி வாழவென வைத்தாய் சாதி
தமிழாடி வீளுதெனில் தகுமோ சொல்நீ
விழுதோடித் தாங்குமரம் வெயிலில் பாதி
வெம்மையகல் வித்தெம்மை வாழ்த்தும் போல் நீ
பழமோடி பாலில்விழ பாகும் வெல்லம்
பார்த்தினிமை சேர்த்தவிதம் படைப்பாய் இனிநீ

நுழைந்தோடி காற்றினிய கீதம்கொள்ள
துளை மூங்கில் வண்டினமும் செய்தாய் ஏனோ
எழுந்தோடி வந்தெமது இன்னல்தீர்க்க  
ஏதுவகை யில்லாதும் இருப்பதாமோ        
விழுந்தோடி நடந்தாலும் விளைக்கும்சக்தி
 வீரமதை விழவைக்க வேண்டாம்தாநீ
முழுதோடி நிற்குமிடம்  முடிந்தோர்வாழ்வும்
  முற்றுஅழிந் துள்ளநிலை மோசம் ஆகி

தலைமீறி எழுகின்ற அலைகொள் நீராய்
 தாங்காத  துன்பங்கள் போதும் தேவி. ‎
கலையூறி  எழும்பாடல்  கரும்பென்றானால்
  காணுமனம் நீகுளிரச் செய்வாய் தேவி
இலைமீறி வழிகின்ற பனியின் நீராய்
 எமையாக்கி வீழ்ந்துவிடச் செய்யாய் ஆநீ!
தொலைதூரம் நிற்காதே துணைதான் பாவி
 துடித்திங்கே கேட்பதெது தோன்றிக் காண்நீ

கிளைதேடி வந்தமரும் குருவிக்கென்றும்
 கேட்காமல் வந்தணையுங் காற்றா யாகி
அளைந்தோடி அன்னமதை உண்ணும் பாலன்
  ஆசையொடு உதைத்தாலும்  அன்னை போல்நீ
வளைந்தோடி தொலைவில் நின்றாலும் எம்மை
 வாழ்வழித் துள்லிமகிழ் வெய்தும் வண்ணம்
களைந்தோடு புன்மைகளைந் தன்பும் கொண்டே
  காலமினி ஆளுந்திறன் கொள்ளச் செய்நீ

No comments:

Post a Comment