Monday 29 April 2013

என் மகளே கூறாய்...!

தேகமதில் நீதுடித்துச் சோகம் கொள்வதென்ன
தேசழிந்த தாய்விசும்பி தோன்றுவதேன் மகளே
நாகமொன்று சீறுவதாய் நேரும்பெருங் கோபம்
நீயெடுத் தேன்மகளே நெஞ்சில் நிறை சோகம்
தாகங் கொண்ட தேதுவெனத் தண்ணிலவே கூறாய்
தந்துனையே சந்தணமாய் தண்மையுறக் காண்பேன்
ஆகவென்ன செய்வதிடுவேன் அன்புமனம் காணும்
ஆனந்தமும் வந்திடவே ஆணையிடு மகளே

மேகமதிற் பாரொளிரும் தாரகைகள் பொன்னா
மின்னுமவை நான்பறித்து மாலை செய்து தரவா
ஏகமதில் வாசமெழ யில்லையெனிற் காற்றில்
ஏறிக் கடல்தாண்டி மலை உச்சிமலர் கொளவா
தாகமெனிற் தேடிச்சுவை தேன்கனியின் சாறு
தங்கமது கிண்ணமிட்டு தின்னவென்று தரவா
மேகம்விடும் தண்ணிலவை மெல்ல நீருள்வைத்து
மென்விரலால் தொட்டிடவே என்மகளே செயவா

கத்துங்கடல் ஆர்ப்பரித்துக் காணுமதில் உலவும்
கரையெழுந்து விழும்அலையால் கால்கள் ஈரமிடவா
சத்தமிட்டுக் கூடுமெழிற் சோலைமரக் காவில்
சேர்ந்தயினக் குருவிகளைச் சுற்றியாட விடவா
மெத்தையெனப் பஞ்சுமுகில் பிய்தணைகள்கட்டி
மெல்லவுந்தன் மேனிதொட்டு மீதுறங்க விடவா
முத்தமிட ஆழ்கடலில் மின்னுமொளி சந்திர
மங்குமெழிற் சூழ்நிலையில் மடியுறங்க விடவா

புத்திரியே பள்ளியிலே பல்கலைகள் கற்றுப்
பேர்புகழிற் தேவதைகள் போற்றும் வகைசெயவா
சித்தமெல்லாம் அற்புதமே செங்கரும்பில் சிந்தும்
சாற்றினிலு மில்லையெனும் தேனினிமை தரவா
சத்தமிட்டு நீசிரித்தால்சிந்தனை யானந்தம்
சந்தமிடும் செந்தமிழில் பொங்குகவி தரவா
அத்தனையோர் அன்புளமே ஆகிடும்வானுதயம்
ஆதவனின் கதிரெனவே என்றுமுனைத் தொடவா

மெத்தையெனும்மேகங்களின் மெல்லியதோர் ஓட்டம்
மேலெழுந்து வான்பறந்த பட்சிகளின் கூட்டம்
முத்தமிட மலைமுகட்டை மேகம்வந்துகூடும்
முட்டிவழிந் தோடும் நதி மெலச்சிணுங்கி வீழும்
சத்தமிடுங் குயிலினிசை சலசலக்கும் பொழில்நீர்
சாரல்தரும் மழைவிழுந்து சிலுசிலுக்கும் இலைகள்
அத்தனையும் கொள்ளும் சுகம் அன்புவழிப் பெண்ணே
அட அடடா மெய்மறக்க அள்ளியுனை அணைப்பேன்

No comments:

Post a Comment