Saturday 27 April 2013

கடலலையும் என்மனமும்

தூரத்திலே அலைதுள்ளிவரும் ஒரு
நேரத்திலே எழும் வீரத்திலே
பாரத்திலே அது பாய்ந்து கணம் விழும்
ஓரத்திலே மணல் ஈரத்திலே
ஆரத்திலே மணி கோர்த்ததென ஆங்கு
ஆடிவரும் அலைத் தூறலிலே
சாரலிலே  அதனோசையிலே  எந்தன்
சஞ்சலமும் விட்டே நின்றிருந்தேன்

மேலையிலே ஒளிபோகையிலே மின்னும்
மாகடலில் மூழ்கும் ஆதவனும்
மாலையிலே வரும் காற்றினனையும் கொண்டு
மங்கைதரு வாசம் மோந்து நின்றேன்
சேலையிலே நீலம் கொண்டவளாம் கடல்
சில்லென் றிருப்பினும் சீறுவளாய்
பாலையிலே மணல் போல் நெளிந்தும் -  அதன்
பார்வை குணம்மாறி இன்பமிட்டாள்

வாழ்க்கையிலே பல சோடிகளாய் பலர்
வந்திருந்தே கதை பேசிடவும்
ஆழ்மனமோ எனை யாரெனவே காணும்
அற்ப நினைவு வந்தாளக் கண்டேன்
சூழ்ந்தவிரி  நில வாழ்வினிலே இவன்
செய்வதென்ன வரை செய்ததென்ன
தாழ்வுணர்வும் வாழும் தன்மையிலும் மனம்
தாவும் குரங்கொப்ப ஆவதென்ன

ஏன்பிறந்தாய் நீயும் எங்கிருந்தாய் இங்கு
ஏன் நடந்தாய் உந்தன் எண்ணமென்ன
தீன் கொரித்தாய் மனை தீண்டிநின்றாய் குலம்
தோற்றுவித்தாய் இன்னும்தேவையென்ன
ஊன் துடித்தாய் உயிர் தான் துடித்தாய் உணர்
வோங்கி நின்றாய் உன்னை விட்டவர்யார்
தேன்குடிக்கு மொருமந்தியென  நீயும்
தீமைக் கிளைதாவி தொங்குவதேன்

வானளவோ இல்லை வாழ்வறமோ - ஒரு
வீழ்நிலவோ தென்றல் வீசுவதோ
மானமதோ மரியாதைகளோ - இவை
மாறுவதோ  மனம் சோர்வதென்ன
தானமதோ தட்டிப் பற்றுவதோ - தலை
தாழுவதோ முடி சூடுவதோ
ஆனதென்ன அன்புபோனதென்ன - மதி 
ஆணவமும் கொண்டு மாவதென்ன

ஆழ்கடலா அதன்ஆழமதா  - அதன்
ஆரம்பமா  அந்தம் உண்டல்லவா
சூழுலகில் ஒரு தூசியிவன் - சுற்றுங்
கோள்களிடை யொரு சூனியமே
ஏழுநிறம் கொண்டவானவில்லில் இவன்
எந்தநிறம் மழை நின்றபின்னே!
வாழும்வரை  வந்த நீள்துயரம் எண்ணி
உள்ளழுதேன்  கடல் சேர்ந்தழுதாள்

No comments:

Post a Comment