Monday 22 April 2013

வாழ்வீது!

 குளுகுளு  என மனம் கொளும்இளம் அனுபவம்
குறைதனைப் புரியாது
பழுபழு எனக் கனி பழுத்துமின் சுவைதனைப்
பலபல்லும் அறியாது
கொழுகொழு வயல்நிறை குலுங்கும் நெல் அறுவடை
கொளும் நிலை உணராது
உழு உழு என வயல் உழுதும் நெல் எருதுண்ண
உரிமையும் கிடையாது

அழுஅழு எனும் நிலை அகிலமும் பிழைபட
அளித்திடும் வாழ்வொன்று
வழுவழுஎனப்பல வகையொடு வசதியை
வழிகொள்ளும் நினைவோடு
கழுகழு வென இறை கடைசியில் தரும் இடம்
கடும் வலி அறியாது
முழுமுழு தவறுகள்  முடிவில தெனும்வகை
முயன்றனம் அவையாது

தொழுதொழு இறையவள்  அருள்தரும்வகையதும்
தொகை யதும் குறையாது
எழுஎழு வுணர்வுகள் எழும்புதிதெனில் மனம்
எதனிலும் சிதையாது
நழு நழுவென எதில் நழுவிய பொழுதிலும்
நடைமுறை வழுவாது
தழு தழுவிடும் உடல் தனைத் தடையிலதென
தரும் முடிவெனுமேது

கொளுகொளு எதனிலும்  குறையல்ல நிறைவினைக்
குவலய வாழ்வீது
வெளுவெளு வெனக் கதிர்விடுமொரு இரவது
விடியவே விடியாது
புளு புளுவென வெயில் படுகையில் வதைஎனும்
புவிகொளும் வாழ்வீது
முழுவதும் அமைதியில் முடிவுற வரும்   அந்த
முழுமையில் குறையேது?

No comments:

Post a Comment