Wednesday 24 April 2013

கவிதை சொல்லும் காதலி

எந்தன் கவிதைக் காதலியாள்
   ஏட்டில் மட்டும் வாழுகிறாள்
சந்தம் போட்டுப் பாடுகையில்
   சற்றே எட்டிப் பார்க்கின்றாள்
சொந்தம் என்றோர் முகமறியாள்
    சொல்லும் பெயரும் யாதுமிலாள்
விந்தை அவளுக் குண்மையிலே 
   வாழும் வகையே  இல்லையய்யா

அன்றோர் மாலை நானிருந்தேன்
   ஆற்றங் கரையின் ஓரத்திலே
நின்றேன் தென்றல் நீவுசுகம்
  நிலவின் ஒளியோ போதைதர
மென்றே விழுங்குங் கனிசுவையும்
   மதுவின் இனிமை மனங்கொள்ள
நின்றாள் பக்கம் நான் கண்டேன்
   நிலவின் தங்கை  வாஎன்றேன்

செந்தேன் வழியும்  சிறுகுரலும்
  செல்லக் கிளியின் வளைமூக்கும்
வந்தேன் என்றே வலைவீசும்
   வட்டக் கரிய விழிகளையும்
கொந்தேன் என்றே அணில் தாவிக்
  கொள்ளா காக்கும் கொய்யாவாய்
பந்தாய்ச் சுவரில் பட்டலையும்
  பார்வைகொண்டே சுட்டெரித்தாள்

சிந்தை கண்டு சிறுமகளே
  சொல்லாய் யார்நீ நீயென்றேன்
உந்தன் கவிதை சிற்பியெனில்
  உணர்வில் வடித்த சிலையென்றாள்
முன்னே என்னை அறியீரோ
    முழுதாயுள்ளம் கொண்டீரே
என்னைத் தொட்டுப் பாரென்றால்
    எதுவுமில்லை காற்றானாள்

தேகம் இல்லாத் திருமகளோ
  திங்கள் வதனம் பொய்யானால்
ஆகும் வார்த்தை அத்தனையும்
  அகத்தே யெழுந்த கற்பனையோ
வேலும் வில்லாம் விழியென்றால்
   வீசும் கலையும்  வேடிக்கை
நாலும் நாலும் இரண்டாமோ
  நற்தமிழ் சொல்லும் பொய்யாமோ

வானில் வெய்யோன் வலம் கொள்ள
  வார்க்கும் வெம்மைத் தகிப்பாலே
கானல் நீராய் தொலைதோன்றும்
   காட்சி  காணும் கலைமான்போல்
வேனில்காலத்  தாகத்தை
   விருப்பைக் கொண்டு கலைந்தோடி
தானிப் புவியில்  தடுமாறும்
   தணலில் பொழியும் மழையாமோ

எந்தன்  மனதில் கவிவானில்
   எண்ணப் பஞ்சாம் முகிலாவாள்
தந்தோம் என்றே கவிபாடத் 
    தோகையாக நடம்செய்வாள்
சந்தத் தமிழின் தங்கையவள்
    சாரீரத்தின் உருவுடையாள்
சிந்தையென்றோர்  சிற்றூரில்
     சொல்லும் கவிதைக் குறவானாள்

ஊனும் உடலம் இல்லாள் காண்
  உண்ணும் அன்னத் தோற்பையும்
தானும் கொள்ளாள் தண்ணிலவாள்
   தனியென் விழிமுன் நிழலாவாள்
தேனும்பாலும் போற்கவியில்
   திகழ்வாள் அவளைக் காணவென
வானும் வாழும் தேவர்களும்
 வந்தாற்கூட  வடிவாகாள்

No comments:

Post a Comment