Monday 22 April 2013

காலச் சுழல்


 காலச் செடியினில் நாளென் மலர்தினம்
காற்றிலுதிர்ந்து விழும் - அதைப்
போலும் வயதென்னும் பூக்க ளுதிர்வதைப்
பொன்முகம் காட்டிநிற்கும்
பாலனென வந்து பாயிற் கிடந்திடும்
பக்குவமாகு மட்டும் - இந்த
ஞால முழுதிலும் நன்மை தீமையெங்கள்
நாளைப் பிரித்தெடுக்கும்

ஓலைக் குடிசையும் ஒட்டும் வயிறுடன்
ஓர்சில பேரிருக்கும் - கொடும்
காலைப் பசியெனும் காதகனின்பெரும்
கைவரிசை சிறக்கும்
பாலை வனமென பாழுமுயிர் வெம்மை
பட்டுத் துடித்திருக்க - அவர்
ஆலைக் கரும்பினைப் போலப் பிழிந்திட
ஆசைமனம் இருக்கும்

நாளைப் பிரிந்தொரு ராத்திரிவேளையும்
நாடி வருவதில்லை - இனி
நாளைநடப்பது வேறு அது இற்றை
நாளைப் போலாவதில்லை
கூழைக் குடிப்பவர் நாளை இருக்கலாம்
கோடி பணத்திடையே - அதே
வேளை பணம் மாடி வீடென்றிருப்பவர்
வீதி மரத்தடியே

நீலக் கருவானில் நீந்தி முகிலோடும்
நீண்ட வழியிருக்கும் - அந்தக்
கோலத் தெளிவிண்ணில் காணும் மாசக்தியும்
கூடி எம்முள் இருக்கும்
மேலே திகழொளி மேன்மைப் பெருஞ்சக்தி
மேவியுடல் அசைக்கும் - அந்த
மூலசக்தி மனம் வேண்டித் தொழுதிடு
மேனியிற் சக்தியெழும்

******************

No comments:

Post a Comment