Tuesday 30 April 2013

விட்டுக்கலை வினைதீர்

கட்டுக்கலை மொட்டின்மலர் யெட்டுத்திசை கிட்டும்வரை
தொட்டுத்தரும் தென்றல் மணமே  -அது
கொட்டும்மது பட்டென்மலர் பக்கம்நடை கட்டும்முறை
குற்றமென இட்டாற் தகுமோ
குட்டிச்சிறை ஒட்டிக் கிட சட்டம் இது விட்டோம் இலை
பட்டுத்துடி என்றோர் வாழ்வேன்  -இவர்
விட்டுப்பெரும் வெட்டைவெளி  கட்டுக்களைந் திட்டப்படி
எட்டி நடைகொள்ளல் வருமோ

மட்டுப்பட இட்டத்துடன் விட்டுப்பெரு விண்ணில் எழு
பட்சிச் சிறகிட்டாய்  இறைவா - அதை
முட்டுப்பட நெட்டுக் கிளை வட்டில்கூடு கட்டித்துயில்
கொட்டிக்கிட என்னத் தகுமோ
சிட்டுக் குருவிக்குத் தரை  விட்டுச்செல ரட்டைச் சிற
கொட்டக் குறு வெட்டக் கருதா
விட்டுப்பற வெட்டைவெளி அட்டப்பெரு  திக்குக்கிடை
கட்டுப்படும் எல்லையிலதாய்

பட்டுத் துணி கட்டிப் பெரும்  இரட்டை மனை ,கட்டில் துயில்
மட்டத்தினில் வாழ்ந்தான் தமிழன் - அதை
விட்டுப் பெருங்கொட்டும் மழை வெட்டுமிடி மின்னலிடை
பட்டுக் கொளும் துன்பம்பெரிதே
பெட்டை யவள் நெட்டை நுதலிட்டோர்சிறு பொட்டேயென
கொட்டும்நில வெட்டும்சுகமும் - தனில்
பட்டுங் குளிர் சொட்டும் மழைஇட்டுத்திரி பஞ்சென் முகில்
எட்டுஞ்சு தந்(தி)ரம் வேண்டும்

எட்டுத்தொகை மற்றுங்கலி வெட்டும்தனம் தட்டும் முறம்
சொட்டும் மறவீரம் எமதே - அவன்
கட்டையுடல் வெட்டிச் சிறு காட்டில் விறகிட்டுக் கரி
கொட்டச் சுடும் சாம்பல் தனையே
 கட்டுத் தடையின்றிக் கரை தொட்டுத்திரிவட்டத் திரை
குட்டை நதிநீருள் கரைக்கும்
திட்டமுடன் பட்டப்பகல் வெட்டுங்கொடுங் கத்திகொளப்
பட்டென்றெம துள்ளே நுழைய

விட்டும்மொழி பற்றும்இலை நட்டமெது இற்றைவரை
பெட்டிப்படம் கண்டோமெனவே
மொட்டுக் களைச் சுட்டுக்கதிர் விட்டுபிரிந் திட்டோர் இதழ்
தொட்டு மலர் நின்றேயாடும்
வட்டசுனை நீரில்முக விம்பம்விரல் தொட்டுகொள
விட்டுசெலும் வாழ்வென் றெண்ணா
அட்டமதில் தொட்டோர்சனி  அன்னதுயர் செய்வோர்தமை
விட்டுக்கலை தீராய் வினையை!

No comments:

Post a Comment