Thursday 2 May 2013

அழகான நாட்கள்


நேராக நிமிர்தோங்கும் தென்னை பனையோடு
நேருயர்ந்து நின்றதெங்கள் ஈழம்
தேரோட மணியோசை தெய்வ வலமென்று
திருவருள் பொலிந்தாடும் காலம்
ஏரோடி உழுதவயல் எழுந்தபயிர் பச்சை
இசைபாடுங் குயில் தோகை நடமும்
காரோட வளைந்தோடும் கரும்வீதி பக்கம்
கனிதூங்கும் மா நின்ற ஈழம்

பழமை கொண் டிருந்தாலும் பழுதின்றி ஓடும்
பாதைவிரை வண்டிகளின் தோற்றம்
இளமாலை சொரிகின்ற இதமான பூக்கள்
எழுந்த மரச்சோலைகளில் பறவை
மழை தூறிப் பெய்தாலும் தமிழ்சந்தம்போடும்
மனமெங்கும் சுகபோதைக் கானம்
துளைகுண்டு தினமோலம் எனவாக்கிஇறைவா
தெருவெங்கும் பிணம் போட்டதேனோ
.
அதிகாலைப் பொழுதேனும் அந்தியிருள் நேரம்
அமைதிகொள் இயற்கையின் தோற்றம்
புதிதாக விடிந்தாலும் போய் மறையும் கதிரின்
பின்னெழும் முன்பனிக் கூதல்
விதிமாறி வேற்றுமொழி வைக்கின்ற சட்டம்
விடியலில் எழும் அச்சம் இல்லை
சதியேதுமில்லை ஒருதனியான பிள்ளை
சற்றும் மனம் அச்சமின்றி ஏகும்

வீராதி வீரரென வெகுண்டெழும் பகைமை
விளையாடி வெல்லும் இள மாந்தர்
போராக எம்மீது படைகொண்டுதேசம்
பலிகொள்ள வந்த நிலையாதும்
பேராக எதிர்நின்றும் அணிகொண்டதாலே
பெரும் வீர த் திறன் கண்டு அச்சம்
வேரொடுவெட்டி இனம் முற்றாக வீழ்த்த
வெறி கொண் டிணைந்த முழு உலகும்

குளம்மீது அலர்கின்ற தாமரைகள் போலும்
குடிமக்கள் விழி பூத்தெழுந்து
தளம்புமலை மீது துள்ளும் சிறுமீன்துடிப்பில்
தன் வேலை கல்வியென்று ஓடும்
வளம் மிகுந்த திருநாடு விளங்கிய தோர்காலம்
வந்ததெங்கள் ஈழமகன்வம்சம்
உளம் மீதுநஞ்சுடனே உருவான எதிரி
ஒன்றாகிச் சிதைக்க விடலாமோ

No comments:

Post a Comment