Monday 22 April 2013

எமனே இது ஏனோ?

  வேட்டையாடு மெண்ணங் கொண்டு   வீரனென்று சூலமேந்தி
 வீதியோரம் வந்துநின்ற கூற்றா
ஆட்டமென்ன அன்னை சக்தி ஆளுமிந்த மேனிமீது
ஆசை கொண்டு நீயிருப்ப தாகா
போட்டி போட்டு நீயழிக்கும் பூமிமீது யாருயிர்க்கும்
போதுமென்றதோர் கணக்குப் போடு
போட்டதென் கணக்கு வேறு பொற்றமிழ் விளைக்க அன்னை
போட்டதே நிலைக்கும் விட்டு ஓடு


நாட்டிலே இவன்தனக்கு  நாளுமிட் டுயிர்தனுக்கு
நாட்களை வகுத்த தன்னை கேளாய்
பாட்டிலேயென் வாழ்வமைத்த பார்வதிக்கு மூத்த அன்னை-
பார் வதைக்கின்கேட்பள் விட்டு வாளாய்
கூட்டிலே உயிரிருத்தி கூடவே உணர்வமைத்து  கோடிகோடி
சூட்சுமங்கள் செய்தாள்
நீட்டியே நடந்துலாவி நின்றனம் இச் சிக்கலான
நீளுடல் அழிப்பதென்ன சொல்லாய்

தேட்டமென்று பாரில்நானும் தேடிவைத்த தொன்றுமில்லை
தேவி கூறும் வார்த்தை மட்டுமுண்டு
பூட்டியென்னை அன்பினாலே  பூமியில்நிலைக்க வைத்து
புன்னகைக்க வைத்த அன்னை கண்டு
காட்டியுன் குணத்தை நீயும்  கையிற்கொள் சுருள்கயிற்றைக்
கட்டியென் கழுத்திற்போட எண்ண
நீட்டியென்  அருள் கொடுக்கும் நீள்வலித்த சூலமேந்தி
நின் செயல் சினப்பளன்னை பாரு

தோட்டமும் பயிர்வளர்க்க துள்ளி யுன் எருதழிக்கத்
தோல்வியென்று நாமும் பின்னர்கண்டு
வாட்டமும் இழந்து வாயில் வார்த்தைக ளொறுத்துவாழ
வையகம்  நிறுத்தினாளோ சொல்லு
போட்டவன் வினை அறுப்பான் போனவர் வகுத்தநீதி
புல்லருக்கும் நல்லவர்க்குமொன்று
ஏட்டிலே இருக்கும்சொல்லும் இன்பமே விதைத்தவர்க்கு
இன்பமே அறுத்தெடுப்பர் எண்ணு

2 comments:

  1. இன்பம் விதைத்தவர் இன்பமே அறுப்பர் – இனிய கருத்து. வாழ்க!

    ReplyDelete
  2. மிக்க நன்றி தங்கள் வரவுக்கும் கருத்தூட்டதிற்கும்

    அன்புடன் கிரிகாசன்

    ReplyDelete