Sunday 30 November 2014

துள்ளும் மனம்


தேனைக் குடித்தபின் தீந்தமிழ் ஓடையிற் 
 துள்ளிக் குதித்தவனாய் - சிறு 
மீனைப் பிடித்திட மேனி  துடிப்பதாய்  
 மெல்ல நடுங்குகிறேன் - புள்ளி
மானைத் துரத்திடத் தாவுமழகொடு
 மஞ்சள் வெயில் பரப்பில் -அந்தி
வானைக் கறுத்திடும் மேகம் பரவிடத் 
தோகையென் றாடுகிறேன் 

சேனை பருத்தி நெல் சூழும் வயல்வெளி 
 சிங்காரப் பாட்டிசைத்தே - வரும்
தீனை உண்ணவென கூடும் குருவிகள் 
 தேங்கிக் கலகலக்க - வளை
கூனை எடுத்துமக் கொண்ட கலயத்தைக்
 கொஞ்ச இடையில் வைத்தே - வரும்
பானை அணைத்தவள் பாவை ஒருத்தியின் 
 பாங்கி லசைந்து நின்றேன்

பூனையைப் போல் மெதுவாக நடந்துமே 
 புல்லரித்துச் சிலிர்த்தேன்- கணம் 
ஆனையைப் போற்பெரி தாயும் அதிர்நடை
 ஆக்கியும் அச்ச மிட்டேன் - இனிப்
பூநெய்யை உண்டதோர் பொல்லாக் கருவண்டாய் 
 போதையில் சுற்றுகிறேன் பின்னே
சீ..நய்..நய்..நய் யென்று சின்னமதிக் குரங்
 காகிச் சிரித்துநின்றேன்

ஏனையனே இன்றோ இத்தனை ஆவேசம் 
 என்றவர்க்கோ பதிலாய். - ஒரு
பேனைக் கொண்டோர் சிறு பாவைக் 
 கிறுக்கியின் பாட்டென வைப்பவளை - இதழ்
தேனை கொண்டோர் மலர் செய்தவழ் போதெழில் 
  தோன்றுமந் நூலிடையில் - கண்டு
நானை விரல்பற்றும் நாளைக் காண வேங்கி
 நெஞ்சம் துடித்தேனென்றேன்                                                                            

...............
இப்படிப் பொருள் கொள்க

பேனைக்(எழுதுகோல்) கொண்டோர் சிறு `பா`வைக் 
 கிறுக்கி இன் பாட்டென வைப்ப, வளையிதழ்
தேனை கொண்டோர் மலர் செய்து அவிழ் போதெழில் 
  தோன்றுமோர் நூல் (புத்தகம்) இடையில் கண்டு
நான் ஐவிரல்பற்றும் நாளைக் காண வேங்கி
 நெஞ்சம் துடித்தேனென்றேன்

No comments:

Post a Comment