Sunday 30 November 2014

புதுமைத்தாய்

 நீரும் நீயே நெருப்பும் நீயே நிகழ் வானத்தின் தீ
தாரும் வெம்மைத் தகிப்பும் நீயே தமிழும் பொறிகொள்ளச்
சேரும் வார்த்தை சிதறுமெண்ணம் திருவாய்மொழியாகி
ஊரும் கொள்ளும் உறவில் நட்பின் உவப்பும் தந்தாயே

தேரும் மனமும் தெரிவான் நிலவும் தேசம் உயர்வானம்
கூரும் கொள்ளும் அம்பும் ஏவும் வில்லும் விளைவாயும்
தீரும் உறவின் திரும்பல் வீணே திசைகள் வழிமாற்றம்
வாரும் முடிவும் வழியும் உந்தன் வண்ணத் திகழ்வாமே

பாரும் காலைப் பனியும் பகலும் பாறை மலைதந்தாய்
யாரும்கொள்ளா அறிவுதிறனுக் கப்பாற் தொலை நின்றாய்
ஏரும் உழவும் இதனால் விளையும் இனிமை அமுதுண்டு
காரும் முகிலும் கடைவான் மறையும் கதிரும் கனஇருளும்

நேரும் இரவின் நிசப்தம் நெஞ்சின் நெறிகொள் உணர்வோடு
நாரும் கோர்க்கும் நறுவாசப்பூ  நவிலும் தமிழ்த்தேனும்
தாரும் உந்தன் தகைதான் தந்தும் தனியே விட்டாலும்
சாரும் பிளவும் சலிப்பும் உள்ளம் தவறும் நிலையீந்தாய்

வாரும் மழையும் விரிவான் இடியும் வேகக்காற்றோடு 
தீரும் மின்னல் போலும் கணங்கள் திகழும் வாழ்வோடு
சீரும் செல்வச் சிறப்பும் என்றே திரிந்தே பெயர்சூட்டி
பேரும் கூடப் பிறழ்வும் தந்தாய் புதுமைத் தாய்நீயே

No comments:

Post a Comment