Sunday 30 November 2014

விதி வலிது

காணாத தொலைவிருந்து வந்தோம் - இந்தக்
காட்சியிலே மெய்மறந்து நின்றோம்
பேணாத பூமரங்கள்போலும் - மண்ணின் 
புழுதியிலே வீழும் பூக்களானோம்
ஆணாகப் பெண்களாக வந்தே உள்ள
ஆசை கொண்டலைந்து தேடி நின்றோம் 
வீணாகப் போகுமிந்த வாழ்வில் - என்ன
வித்தை கற்றும் போகுமுயிர் மீட்கோம்.

கண்ணிரண்டும் மூடுவதில் துன்பம் - இந்தக்
காயமெனும் சேர்க்கைவிடில் துக்கம்
அண்ணளவில் ஏறெத்துப் பார்த்தால் - புவி
அத்தனைக்கும் உள்ள விதியாகும் 
விண்ணிலெழும் போதுயிரும் சென்றே 
வீடடைந்ததாய்  நிலைமை தோன்றும் 
கண்ணறியாப் பேரொளியிற்கூடி 
காலமென்னும் தேவன் கொள்ளும் வாழ்வு

தண்மையொளி தந்தவரோ தேகம் 
தானிணைந்த மூச்சினோட்டம்போதும்
உண்டு களிதுற்ற தெலாம் நீக்கு
ஓடிவா இப்போ தென்றாணை யிட்டால்
எண்ணமதின் விடுதலை நம் தேகம் 
இல்லையென்று தீயெழுந்து மூடும்
மண்ணுலகில் மானிடத்தின் வீழ்ச்சி 
மறுபுறத்தில் மாயைவிட்ட காட்சி

எண்ணுவதில் உண்மைகொண்டு காணின் 
இதுவலவோ நன்மை கொண்டதாகும்
புண்ணெழுந்த வேதனைகள் போயும்
பிணியழுத்தும் தாகம் கொண்டதேகம்
எண்கடந்து எல்லை யற்றவானின்
ஏகமான தெய்வம் காணும்வேளை
பண்ணிய நற்பணிகளோடு பாவம்
பலகடந்து வெண்மையொளி சாரும்

No comments:

Post a Comment