Sunday 30 November 2014

நன்றிகள் அன்னையே!!


   தென்னைமரங்கொண்ட தோப்பினிலெ ஒரு
சின்னக் குடிசையம்மா -அங்கு
தென்றல் வந்து தினம் தொட்டணைக்க மனம்
தீயழ கெண்ணுதம்மா
கன்னம் வழியும் ஓர்சின்ன குழந்தையின்
உள்ளக் கவலையம்மா -அது
என்ன விநோதமோ உன்னை நினைக்கையில்
இல்லையென் றாகுதம்மா

அன்னை முகம்தன்னில் உந்தன் ஒளிகண்டு
புன்னகை கொண்டிருந்தேன் -அதில்
அன்பெனும் தன்நிலை காண அளித்தவள்
இன்றரு கில்லையம்மா
சொன்ன சொல்  எப்படி உன்னையடைந்தது
மின்னற் பொறிகளென்றா - இந்தத்
தன்னிலை கெட்டவன் தானுயர்வாகிடும்
தன்மை கொடுத்தாயம்மா

சின்னக் குழந்தையும் கொள்ளக் கருவினில் 
அன்னை வயிற் றுதைக்கும் - அது
பின்னர் பிறந்ததும் பெற்றவர் கொஞ்சிட 
இன்னும் நெஞ்சில் உதைக்கும்
அன்னை மனம்கொண்ட அன்புபெருகிட  
அள்ளி அணைப்பதெல்லாம் -இந்த
சின்னச் செயலதில் உள்ளங் கன்றி என்றும் 
அன்னை வெறுப்பதுண்டோ

முன்ன மறிந்திட வில்லையிது புது
மேதினி யென்றறிந்தேன் -இதில்
வன்மையுடன் பல நன்மைகளும் கொண்டு
வட்ட சுழல் நிலையாம்
    தன்னில் அலைந்திடும்  இந்த மண்ணில் வந்து
    தத்தித் தவழுகிறேன் - எந்தன்
சின்ன விழிகளில் மின்னிஎழும் சக்தி
செல்ல உணர்வு கொண்டேன்
 
கண்கள்முன்னே பலகாட்சிகளின்பெரு
வண்ணக் கலவை மயம்’- இதில்
உண்ணும் கனிதனை  இட்டதருவினில்
   ஓசையிடும் குருவி
   எண்ணமினித்திட இன்னிசை தந்துமே
விண்ணில் பறக்கும்படி -அதை
திண்ணமுடன் மகிழ்ந்தாட விதித்தவள்
தேடிச் சுகமும் தந்தாள்:!

No comments:

Post a Comment