Sunday 30 November 2014

எங்கு சென்றாய் மகளே

மழைகொண்ட உறவுக்கு மரமென்றும் நினைவாக
மண்ணிலே நீரைத் தேடும்
களை கொண்ட பயிரன்பு கயமைக்கு பொருளாகும் 
கரங்களால் அழிந்துபோகும்
முளை கொண்டு வளர்கின்ற சமுதாயத் தோட்டத்தில் 
மகளே வா நீயும் நானும்
பிழை என்றுஎது கொண்டு பிரிவென்று வந்ததோ 
பதில் கண்டதில்லை இன்றும்

பிரிவென்ப மாறாத நியதிதான் இருந்தாலும் 
பேசற்ற நிலைமை போதும் 
பரிவென்ப மனம் கொள்ளும் பரிசென்றபோது மேன்
படையற்ற போரும்காணும்
வரியன்பில் கலந்திங்கு வரும்பாடல் நின்செவியுள் 
வண்டுண்ணும் தேனையூற்றும்
சிரியெந்தன் மகளே நின்திருவிழிகள் எனைக்காணச் 
சிலிர்க்கின்ற உணர்வு போதும்

பறியென்றே காலமெனும் தேவனுனைப் பாதியிலே 
பக்கத்தி லிருந் தகற்றி
முறியென்று நின்னழகுப் பேச்சிலுளம் நான் மயங்க 
முன்நின்று பிரித்து வைத்தான்
தெறிஎன்று தந்தைகொளப் பாசமுயர் தேர்ச்சில்லை 
திருகியுடைத் தரை வீழ்த்துவான்
குறிஎன்றும் வாழ்வரையைக் கொள்பவன் தனையிங்கு 
கூப்பிட்டு விடவும்செய்வான் 

எரிகின்ற நின்மனதின் இடர்தாரும் சினந் தணியின் 
இதில் மிச்சம் இன்பமாகும்
புரிகின்ற வரைதானும் புகைகொண்டு காணும்மனம்
பொய்யுள் வாய் மைமறைக்கும்
விரியுந்தன் சிறகுகளை விண்ணேறிப் பறக்கின்ற 
விதமாக நீயும்காணும்
சரியென்னும் நம்பிக்கை தவறாதென் மீதெழுமின்
சற்றும் துயரற்றுப்போகும்

வளைகொண்ட நண்டுதனும் வழிமீது நடக்கையில் 
வழமைக்கு மாறிஓடும்
சுளைகொண்ட பழமான தேன்சுவைப் பலாக்கனி 
சுற்றிக்கை தொட முள்ளாகும்
விளைகின்ற பசி நீக்க வெளித்தோற்றம் மறுத்தாலும்
விரித்துபார் பொய்யுள் மெய்யாம்
மழை தூற வெயில்காண வரும்வான வில் அல்ல
மகளே நாம்வாழவேண்டும் 

No comments:

Post a Comment