Sunday 30 November 2014

சொர்க்கம் எங்கே?

    பச்சைவிரித்த புல்மீதிருந்தேன் பனி
    கொட்டக் கொட்டக் குளிராக
பால்நிலவின் ஒளி வீசியது எழில் 
    சொட்டச் சொட்டச் சுகமாக
இச்சைகொண்டோர் வெள்ளை மேகம் நிலவினை 
     விட்டுத் துரத்திடக் காண
என்னே அழகவள் ஏய்த்துவிட்டாள்  நிலா   
     ஏக்கத்தில் மேகம்விட்டோட

அச்சமுடன் தனிநின்ற நிலவினை
   ஆகா எழிலென்றே  விண்மீன்
உச்ச மகிழ்வொடு கண்சிமிட்ட அந்த
   உல்லாசக் காட்சியைக் கண்டேன்
இச்சகம் மீதினில் மட்டுமேன் இன்னமும் 
   இத்தனை இன்னலும் துன்பம்
நச்சு நினைவுகள் தீமைகளோடிந்த
  நாளில் உலகென்னும் வண்ணம்

உள்ளம் நினைந்திட முன்னே ஒர்பேரொளி
  உச்சிவா னின்றென்னில் வீழ
ஒசையற்றே இருள் போலும் விண்ணாழத்தின் 
  உள்விழுந்தேன் கணம்போல
எள்ளி நகை கொள்ளல் போலும் சிரிப்பொன்று 
  எங்கோஅசரீரி ஆக
என்னே நினைந்தனை மானிடனே இவ்
  வர்த்தமற்ற வாழ்வேயென்றாய்

கொள்ளமுடியாத துன்பமென்றாய் இதோ
   கொள்ளினிமை யென்று சொல்ல
கொள்ளை அழகுடன் காண்பிர பஞ்சத்திற் 
   குள்ளே பறந்து விழுந்தேன்
தெள்ளெனக் காணும்நல் வண்ண கலவையின்  \
   திட்டெனும் மாயப் புகைசூழ்
திக்கறியாவோர் ஆழத்தினுள்ளே
   திணறிக் கணத்தில் விழுந்தேன்

பள்ளிச் சிறுவனும் பக்கத்துக் கோவிலில் 
  பார்த்த வாண வெடிக்காட்சி
பற்றியெரி அழல் பட்டு விரிப்பினில்
  பெற்ற அழகைகைக் கண் கொள்ள
புள்ளீயிட்ட துகளோடிப் பலமின்னும் 
  பிரபஞ்ச தூசினுள் மேனி
பட்டுமினுங்கிய போது அயல்பூத்த 
 பல்லரும் சூரியன்கண்டேன் 

உள்ளேகருங்குழி யொன்றிழுத்தல் போலும் 
  ஓர்கணம் என்னைமறந்தேன்
துள்ளி ஓசையிட தொம்மெனல்கீழ் விழுந் 
  துள்ள இடம்சொர்க்கம் கண்டேன்
வெள்ளை மணல் நல்ல வீசும் இளங்காற்று
   வீதியெங்கும் துய தோற்றம்
உள்ள வரை இங்கு வாழ்ந்துபார் உன்மனம்
  உண்மை அறியும் என்றேண்ணி

(வேறு)

எழுந்து நின்றேன் விழிகொண்டுகாண
  என்முன்னே சிறுகூட்டம்
அழுந்து மனதுடன் உணர்வுகளற்ற 
  அதிசய மனிதரைக் கண்டேன்
பழுத்த கனிகளும் பரவிய நெல்வயல் 
 பறவைகளின் சிறுகூட்டம்
முழுமை நிறைவுடன் பசுமையும் கொண்ட 
   முன்னேகாண் அரும்சொர்க்கம் 

இழந்த நிலையுடன் இருந்த முகமதை 
   எவரும்தவறா கொள்ள
விழைந்த செயலெது விளம்பீரென்றேன் 
   விரைந்து பதில்சொலக் கேட்டேன்
விழுந்தாய் பின்னே எழுந்தாய் நீயும்
   வீழ்ந்ததனாலே எழுந்தாய்
விழுந்து விடாமல்இருந்தால் நீயும் 
   விரும்பொ எழுவதும் உண்டோ 

குழந்தையின் மனதாம் புரிவேனல்லேன் 
  புரிந்திடகூறும் என்றேன்
புரியாவண்ணம்  பேச்சுண்டாயின் 
   புரிபவர் புரிந்திடக்கூடும்
புரிந்திடல் இல்லா தில்லை யாயின் 
   புரிவதென் றொன் றிலையாகும்
இரவது ஒன்று இருந்தால் தானே 
   இர்வியின் உதயம் தோன்றும்

இரவென்றில்லை என்றால். பகலும் 
  இயற்கையும் இல்லாதொழியும்
பரவும் ஒளியில் பரவசம் தோன்றா
  பார்க்கும்விழிகள்கொள்ள
விரவிய பனியும்குளிரும் நெகிழும்
 வியன்தரு பூவின் மலர்வும்
சுரக்கும் தேனின் துளிவண்டாடும் 
  செயலும் குளிர் காற்றில்லை 

இரக்கும் ஆண்மை ஏவல்பெண்மை 
  இதனைக் காணும் இரவே
பரந்த தோளும் பகைமுன் வாளும் 
   பெரும் வீரம் பகல் கொள்ளும்
குரங்கின் தாவல் குறும்புமனமும் 
 கொண்டால் இன்பம்காணும்
அரவம் ஆடும் அழகை ரசிப்போம்
  ஆடும் மயிலும் வேண்டும்
 
 
துன்பமில்லா தின்பம் இல்லை 
   துயரில்லா மகிழ்வில்லை
இன்மை இன்றேல் இருத்தல் விளையா 
  எதிர்மை சக்திப் பிறப்பே
புன்மைவாழ்வில் பொலியின் நன்மை 
  பிறக்கும் வாழ்வின்சுவையும்
அன்பை வேண்டின் அகத்தில் வெறுப்பை 
   அறிதல்வேண்டும் என்றார்

இன்பமுண்டு துன்பமில்லை 
  எங்கள் உலகில் என்றும்
வன்மையில்லை வாழ்வின் நேர்மை 
 வகையில் குறைவேயில்லை
தன்மை உணர்வில்  தாழ்வே இல்லைத் 
 தீமைஇன்னல் அறியோம்
நன்மை ஒன்றே நாமறிவோ மதில்
 நாளும் நலிந்தே போனோம்

இன்பம் கொண்டோம் என்பார் இங்கே 
  இன்பம்மட்டும் உண்டாம்
துன்பம் அறியோம் அதனால் இன்பம் 
  தருமோர் மகிழ்வைதெரியோம்,
அன்பை மட்டும் கொண்டோம் அதனின் 
  ஆழம் எதென்றறியோம்
துன்பம் இருந்தால் தருவாய் மனிதா  
  துயரம் வேண்டும் என்றார்

சொல்லும்செயலில் உண்மை மட்டும்
  சொல்லிப் பேசக்கற்றோம்
வல்லா திக்கம் இல்லா  தொன்றாம் 
  வருந்தல் அதனால் அறியோம்
வன்மை மென்மை வலிமை மெதுமை 
  வந்திணை ந்தாலே இன்பம்
தன்மை அறிவாய் எதிர்வாம் முனைகள்
 தானொன்றாகும்  காந்தம்

ஆணும்பெண்ணும் இணைதல் இன்பம் 
  அறிவும் மூடத்தனமும்
கோணும் உடலும் குறையும் அழகும்
 கொள்வோர் மனதில் காதல்
காணும் பெரிதோர் திறமை மாற்றம் 
 கண்டால்தானே விளையும்
பேணும் வாழ்வில் பிறழ்வே இணையும்,
  பிரிவும் சேர்வும் வாழ்வாம்

No comments:

Post a Comment