Sunday 27 October 2013

தேடியதும் நாடுவதும் (1ம் பகுதி)

உள்ளம் பிழிந்தினி சொல்லுங் கவிதைக்கு
உட் பொருள் தேடி நின்றேன் -  ஒரு
கொள்ளை எழில்மலர் கூடிப்பொ லிந்தபூங்
காவினுள்ளே நடந்தேன் -அங்கு
அள்ளும் மனதெழில். ஆனந்தபோதைகொண்
டாட மலர்கள் கண்டேன்- இனி
கள்ளினைத் தேக்கிய வெண்மலர்காள் ஒரு
கற்பனை தாருமென்றேன்

வெள்ளை மலரொன்று வேடிக்கை நோக்குடன்
விந்தை உணர்வு கொண்டு  -ஏது
தெள்ளத் தெளிவின்றி கூறுவதென் உந்தன்
தேவையும் என்னவென்றாள் - ஆகா
அள்ளக் குறைவற்ற பேரழகி நானும்
அன்னைத் தமிழ்க் கவிக்கோர் - நின்றன்
கள்ளின்சு வையொத்த உட்பொருளில் ஓரு
கற்பனை தேடுகிறேன்

நள்ளிரவில் மின்னும் தாரகை போலந்த
நன்னெழிற் பூவருகில் - மெல்லக்
கள்ளச் சிரிப்பென்றைக் காற்றில்விடுத் தயல்
காணும் சிவந்தமலர் - விரல்
கிள்ளிவிட்ட கன்னச் செம்மையுடன் கண்டு
கற்பனை யாமறியோம் -  இங்கு
உள்ள தெல்லா முண்மை தானறிவோம் அதில்
என்றும் மலர்ந்தோ மென்றாள்

எள்ளவும் துய ரேதுமற்ற அந்த
இன்மல ரண்டை விட்டு - கரம்
அள்ளிச் சிறுபிள்ளை குங்குமமும் கொட்டி
அப்பிய கன்னமென - தரும்
உள்ளமதில் அச்சம் ஊற்றெழவே கதிர்
ஓடியெழ முன்னதாய் -பெரு
வெள்ளமெனச் சிவந் தோடும் முகில் கண்டு
விண்ணை ரசித்து நின்றேன்

வெள்ளிக் கொலுசுகள்  துள்ளிக் குதிக்குமவ்
வேளை தனில்எழுமே - அந்த
அள்ளிச் சிதறிடும் ஆரவாரத்தொடு
ஆலமரக் கிளை யில் - சிறு
புள்ளின கூட்டமும் புத்துணர்வில் வானம்
போகுமவ் வேளையிலே -அயல்
தள்ளியோர் புள்ளிசை கானம்படித்துப் பின்
தம்மினம் சேரக்கண்டேன்


(குருவி பாடியது)

நெல்லிருக்கும் தேசம் தேடிப் போகிறோம் - இந்த
  நீல விண்ணிலே எழுந்தே ஏகுவோம்          
நல்முதிர்ந்த நெற்கதிர்கள் கண்டிடில் -அதை
 நாடியுண்டு வீடு வந்துசேருவோம்
இல்லையென்ற கற்பனைக்குள் மூழ்குவோம் - இன்னும்
  எல்லையற்று நாடுதாண்டி ஓடுவோம்
அல்ல லற்ற ஆனந்தமாம் வாழ்விலே - கண்டு
  அன்பு கொண்டும் ஒன்றுகூடிக் காண்கிறோம்

நல்லவர்தம் நாட்டில் நின்று பாடுவோம்- அந்த
 நாட்டிலெங்கும் பச்சைவளம் காண்கிறோம்
அல்லவரின் தேசம் கூடச் செல்கிறோம் - அங்கு
 அன்னமின்றி ஏங்கும் மக்கள் நோகிறோம்
சொல்லவல்ல தூயமனம் கொண்டவர் - எங்கும்
 தோல்விகொள்ளத் தீயவர்கள் வெல்வதும்
எல்லயற்ற கற்பனை இல் உண்மைதான் - கண்டு
 ஏங்கி விழி சோர்ந்து வீடு செல்லுவோம்
********

சின்னக்குருவியின் செந்தமிழ் பாட்டினில்
 சிந்தை பறிகொடுத்தேன் -அது
என்னவிதம் அந்தக் கற்பனை வான்வெளி
 காணவென் றாசை கொண்டேன்
மின்னும் வெளிதனில் யான் பறந்தால் வரும்
 மேனி சிலிர்ப்பினிலே -நல்ல
இன்கவிதை வரும் வானெழவா என்றேன்
 அன்னையா கட்டுமென்றாள்

(அடுத்ததில் முடியும்)

No comments:

Post a Comment