Sunday 27 October 2013

கண்ணே கண்ணுறங்காய்

சித்திரமே  செங்கரும்பே சேர்ந்தாடும் மல்லிகையே
நித்திரையைக் கொள்வையடி  நீர்விழிகள் ஊற்றுவதேன்
இத்தரையில் நீபிறந்தாய் ஈர்விழிகள் கண்டதெலாம்
அத்தனையும் துன்பமடி ஆறிமனம் கண்ணுறங்காய்

புத்திரியே பூமகளே பொல்லாயிப் பூமியிலே
கத்தியழும் காட்சிகளே  காலையிலே சேதியடி
நித்திரையில் கண்ணயர்ந்தால் நெஞ்சமெலாம் பதறியழக்
கத்தியும் கொண்டோர் உருவம் கனவிலெனைத் துரத்துதடி

பத்திரிகை கையெடுத்தால் படத்துடனே வெடிகுண்டால்;
இத்தனைபேர் போனதென  எண்ணிக் கணக்குரைப்பர்
சத்தமிட்டு அழுபவரும் சித்தமழிந் தாடுமிடம்
புத்தொளிவண் ணத்தொலைகாண் பெட்டிதரும் காட்சியடி

நித்தம்விழி காண்பதிலே நொந்துமனம் துடிதுடித்து
கொத்தும் விசஅரவமெனக் குலைநடுங்க வைக்குதடி
நித்தம் வருஞ் சேதியினை நீமறந்து கண்ணுறங்கு
அத்தனைக்கும் நீவருந்த ஆவி துடித்தஞ்சுமடி

சத்தியத்தின் ரூபமற்ற தத்துவமும் என்ன படி
மத்தியிலே அன்புஎனும் மாமருந்தே தேவையடி
சுத்தமென வாழ்நெறிகள் சொல்லிமனம் காப்பதற்கு
உத்தமரோ இவ்வுலகில் உள்ளனரோ .ஐயமடி

பெற்றவரின் குற்றமதோ பிள்ளைகளோ நாமறியோம்
குற்றமிடும் காட்சிகளில் கொண்டவரைத் தூண்டிவிட
பற்றெழத்துப் பாக்கியினைப் பெற்றழிக்கும் நாயகனை
முற்றும் முழுத்திரையினிலே  முன்னெடுத்துக் காட்டுகிறார்

அற்றதிங்கே நீதியென அழுதுமென்ன ஆரமுதே
தொற்றியதோர் நோயாகித் துடிக்கு முயிர் வதைப்போரும்
இற்றைய நாள் தீரரென இம்சையிட்டுக் கொல்கலையை
பற்றியவர் வீரரெனப் பாரில் புகழ்ந் தேற்றுவதோ

கற்றறியக் கணனியொன்றைக்  கைமடித்துத் தூக்கவெனப்
பொற்குலத்துப் பிள்ளையர்க்குப் பொருள்வழங்கப் போதைதரும்
உற்றதொரு குருதிதெறித் உடலமதில் குண்டு துளைத்
தற்றுயிரும் வீழ்த்துகின்ற தகமை பெற விளையாடி

பற்றெழவும் பாவியுடல் பதைபதைத்துக் கொல்வதினைச்
சுற்றுலகில் நாயகனாய் சொல்லாமல் உணர்வூட்டும்
வெற்றுலகின் வன்மைதனை விதைப்பவரோ பேருலகின்
முற்போக்கு வாதிகளும் மேலுலகாம் என் செய்வேன்

வித்தை யொன்று மில்லையடி வேந்தன் எனில் சொல்லும்வகை
உத்தரவென் றாணையிட  ஊரையெலாம் கொன்றொழித்துப்
பைத்தியமாய் தேசமெலாம் படை நடந்த கேவலத்தை
சத்தியத்தின் செய்கையென சாற்றுவதும் வேடிக்கையோ

கொல்லுமொரு கொலைவெறிக்கு கூடியிந்த உலகமெலாம்
நல்லோர் பொற்கிழி யளித்து நாட்டியமும் ஆடுதெனில்
இல்லார் குணமெடுத்தோர்  இயல்புடை நல் லோரெனவோ
எல்லாமோ எண்ணி விழி ஈரமெழ நீயழுதாய்

பொற்குவையே பேரழகுப் பேறேயென் புதுநிலவே
சொற்றமிழின் நற்கவியே சுந்தரமென் இதழ்குவித்து
வெற்றுவிழி செவ்வானச் சிவப்பெடுக்க நீயழுதால்
பெற்ற மனம்நோகுமடி பேசாமல் கண்ணுறங்காய்

******************************

1 comment:

  1. அருமை... "காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே... காலமிதைத் தவற விட்டால் தூக்கமில்லை மகளே" பாடல் ஞாபகம் வந்தது...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete