Saturday 22 February 2014

காத்தருள் தெய்வமே

விழிமீது ஒளிதந்து வெளிமீது நிலைகொண்ட
அழியாத பெருந்தீபமே
எழிலான மலர்வாசம்  இழைகின்ற காற்றோடு
எமைவாழப் புவியீந்தனை
பொழிலாடி விரிகின்ற  புனல்மீது அலைபோலப்
பொலிகின்ற உணர்வீந்தெமை
வழிதேடி விரிகின்ற  வாழ்வின்பம் தனைவேண்டி
வழுவோடு அலை என்றனை

மொழிகூறிக் கதை பேசி  முழுதாகத் தமிழ்கூறி
முடிவான வரையாடினோம்
அழியாத உடலென்றே அகங்கார மதம்கொண்டு
அறிவானததைப் போக்கினோம்
பழியாவும் எமையென்று  பரிதாபம் உலகன்று
படைகொண்டே எமைமோதவும்
குழியாகப் பெரும்வாழ்வு குலைந்தாக எமையிங்கு
குடியாக்கி வழி செய்தனை

அழுதாலும் விழுந்தாலும் அதிதீபஒளியான
அருஞ்சோதி யெமதன்னையே
தொழுதோமே எமைக் காத்து துயரென்ன அதைக்கேட்டு
துடிக்காது இரு என்றனை
மழுவேந்தும் சிவன் வந்து மண்மீது நடமாடி
மறையென்று  முடிவாக்கியும்
தொழுதாலும் இரங்காது துயர்கண்டு இறங்காது
துடிஎன்று தொழில்செய்தனன்

புழுவாக வாழ்வென்ப புரியாமல் நெளிந்தோடிப்
பொழுதான பல ஓட்டினோம்
வழுவாக நடைபாதை வலமாக இடமாக
விழிமூடி  நடை கொண்டனம்
தொழுதோமின் றருள் வேண்டித் துகளோடு பெருங்கோளம்
தொலையண்டம் தனையாக்கியே
வழுகாது சுழன்றாடும் வகையான செய்தாயே
வா எம்மைக் காத்தன்பு செய்

2 comments:

  1. அருமை... பல உண்மைகள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நன்றிகள் பல உரித்தாகட்டும்! நண்பரே என்று வாழ்க நல்முடன்!

    ReplyDelete