Thursday 20 February 2014

கனவுகளில் காணும் இன்பம்

கிண்கிணென்றே ஒலிக்கின்ற மணிகள்- கூடநின்றே
குளுகுளுக்கத் தொட்டோடும் காற்று -கண்மறைய
விண்ணிருந்து தூவுமெழிற் பூக்கள் - விழியகன்று
வெளுவெளுக்கும் வரைகாணும் காட்சி சுற்றிவர
பண்ணெழுந்து பாடலிசைநாதம் பக்கத்தில்
பாதமொலி கேட்டாடும் பூவை  ஆடலிடை
புன்னகைத்து கண்ணடிக்கும் பேதை -கண்டுமவன்
பூவெடுத்து நுகர்கிற காட்சி

மாலையிலே மஞ்சள் வெயில்மோகம் மனம்மயங்க
மணி முத்து வைடூர்யம் வைரம் எட்டிவைக்க
காலைத்தொடும் கனகமுடன் ரத்னம் கண்டெடுக்கக்
கோமேதகம் பக்கமெழில் நீலம் மரகதமோ
மேலைவைத்த தென்ன புஷ்பராகம் ஆசைதரும்
மேகலைக ளோடுஒட்டி யாணம் வெள்ளிமணி
மூலையிலே கொட்டிவைத்தகாசு கண்டுஅள்ள
மின்னுமவை கண்ணாடித் தூள்கள்

வெண்ணிலவு பொன்னொளிர்ந்த வேளை கண்சிமிட்டி
விளையாடிச் சிரிக்கும் விண்மீன்கள் பூமியிலே
தண்சுனையில் ஆடுமலை வேகம் கண்ணழகாம்
தூரத்தேபோகும் முகில் காட்சி இத்தருணம்
எண்ணமதில் ஏற்றமுறும் இன்பம் எழுந்துவிழும்
ஆழ்கடலின் ஓடுமலை போலும் எங்கிருந்தோ
கண்ணெதிரில் மின்னுகின்ற வானம் கடுமிருளில்’
கைதட்டும் ஆகாயப் பெண்கள்

போதைதரும் கனவுகளின் மிச்சம் தேன்மலராம்
பூவிரலில் நாதமிடும்வீணை புல்லரிக்கக்
கோதையவள் கைபிடிக்கும் மென்மை கைமலரக்
குவளையிலே தேன்கனியின் சாறு மூதறிஞர்
சூதுஎனும்  விளையாட்டில் ஆர்வம் சுற்றிநிற்க
துரியோதனன் தருமர்வாதம் ஆடவென
பாதகமோ பண்பறியேன் நானும் பார்க்கவிழி
பரிதாபம் தூக்கம் விடும் நேரம்

No comments:

Post a Comment