Thursday 27 February 2014

கற்பனை ரதமேறி

கலைவான முகிலேறிக் காற்றூதும் வெளிதாவக்
கனவுரதம் ஒன்றுதர வேண்டும்
நிலையற்ற புவிபோலும் நீலவான்வெளி செல்லும்
நெடும்பயண மின்றுகொள வேண்டும்
தொலைவானில் வண்ணமெழும் தீப்புயலின் சூடுதனில்
தொட்டபடி தூரப் விழுந்தேகும்
இலையென்வி நோதமெழும் இன்பங்கள் அதிசயங்கள்
எழில்காணும் ஓருலவு வேண்டும்

ஒரு பயணம் புதுமையுடன் ஒருகோடி ஒளியாண்டு
உறைபெரு விண்ணூ டடைய வேண்டும்.
கருவானில் எழுமதியின் காணுமொளி பால்நிலவின்
குளுமையுடன் சூரியன்கள் தோன்றும்
பெருமலர்கள் ஆளுயரம் பொலியும்படி உயர்வுகொளப்
புதுஅருவி தேன்வழிந்து வீழ
இருசிறகு இணைந்ததெனும் உணர்வுஎழக் கரமசைய
இலகுவென வான் மிதக்க வேண்டும்


மலர்களொளி வீச அதில் மத்தாப்பின் வண்ணவகை
மணித்துகள்க ளாய்த் தெறிக்க வேண்டும்
கலகமின்றிக் கனிமொழியும் காணுருவம் ஒளியெனவும்
கதைபேசிக் குலவும் வகைவேண்டும்
சில நதிகள் வாசமெழச் சென்றதனில் நீர்பருகச்
சிலுசிலெனக் குளுமைகொளு முணர்வில்
தொலைவில்விண் மீதுபறந் துலவியெரி தீயருகில்
தொட்டவிதமாய்த் திரும்பவேண்டும்

தெருவெங்கும் சிறுரதங்கள் திருமகளி னழகுடனும்
திகழுமெழிற் தேவதைஉட் செல்ல
வருமிளைய தென்றலதில் வண்ணநிறப் புகையெழுந்து
விழிகளின்முன் விளையாடவேண்டும்
பருகிடவெண்மலர்த் தேனும் பாவெழுதும் போதைதனும்
பெருகுவெனக் கவிநூறு தந்து
உருகி மனம் வழிந்தோட உணர்வுதனில் தீபரவ
உயிர்கள் மகிழ் வடையுந் தமிழ் வேண்டும்

நெளிவுகளும், வளைவுகளும் நீரோடை மலைகளென
நீந்திவிண் வெளிகாண வேண்டும்
பொழியமுதத் தூறலெனப் புதுவிளக்கினொளி வெள்ளம்
புகுந்தேகும் விளையாட்டு வேண்டும்
மொழியெதுவும் பிறிதின்றி மதுவென்சுவைத் தமிழுடனே
மனிதரெனும் பதுமைகளின் உலகம்
ஒளியழகுத் திருநாடும் உணர்வதனில் திறனோடும்
ஒருமையுட னாயிருக்க வேண்டும்

கருவயலில் உறைகுளிரில் கண்கவரும் தோரணங்கள்
காணுமொரு எழிற்கோலம் வேண்டும்
பெருகும் செறிகயமையுடன் நெறிதவறும் நிகழ்வுமின்றிப்
பசுமையுணர் வானநிலை வேண்டும்
உருகி மனம் வழிந்தோட உயரிசையில் நடமாடும்
உருவங்கள் உலவிவரவேண்டும்
தருணமதில் காற்றோடு தலைநிமிர்ந்து படபடத்து
தமிழன்கொடி உயர்பறக்கவேண்டும்

நீலமலை உயர்ந்தநெடு முச்சிதனில் நின்றண்டம்
நிலைமை தனைப் பார்வையிட வேண்டும்
கோலமிடு வாசலெழிற் கோளங்கள் சுற்றுமெழில்
குழிவானை  விழிகாண வேண்டும்
வாலெரியும் நட்சத்திரம் வளர்பிறையும் ஒளிவீச்சும்
வடிவுற்ற அசைவும் விழிகாண
காலம்சில நாள்களென காணுமெழில் மனமகிழ்ந்து
காயும் இந்த பூமிவரவேண்டும்

No comments:

Post a Comment