Thursday 20 February 2014

பொய்மையும் வாய்மையுடைத்து

மின்னலெழுந்த மேல்வானிடையே கரு
மேகம் இடித்தது நெஞ்சதிர
பொன்னொளிஒன்றிடை மின்னமின்ன நானும்
பேச்சிழந்து முன்னே காணுகிறேன்
என்ன நடந்தது வானடியில் இரு       
கண்களும் கூசஇருள்மறைய
எந்தனைப் போலஇன் னோர் உருவம் அங்கு
எட்டிநடந்தண்டை ஏகக்கண்டேன்

முன்னேவியந்திட நின்றவனை - நோக்கி
மேலும்கீழுமெனப் பார்த்து நிற்க
சின்ன உதடுகள் மெல்ல விரிந் திடச்
சிந்திய ஏளனம் கண்டுகொண்டேன்
என்ன எனையொத்த மானிடனே நீயோ
எந்த உலகத்தின் சொந்தமென்றேன்
கன்னம் சிவந்திட வெஞ்சினத்தால் அவன்
காணும் திசையினில் கேட்டுவைத்தேன்

உன்னுளிருப்பவன் நானே என்றான் என்றும்
உன்னொடு சேர்ந்திவன் ஒன்றேயென்றான்
என்னைவிட்டும் நீயும் இல்லை யென்றான் என்றும்
என்னுயிரோ உந்தன் உள்ளே என்றான்
உன்னையு மென்னையும்செய்தவளோ இங்கே
உன்னிலே என்னையும் என்னிலுன்னை
உன்னதமாகவே வாழவைத்தாள் இன்று
உன்னையும் என்னையும் .இரண்டுசெய்தாள்

என்னையும் உன்னையும் ஒன்றிருத்தி அன்னை
இன்றுவரை செய்த அத்தனையும்   
இன்றோ ஈர்பாதையில் இட்டுச்செல்ல எண்ணி
ஏனோ ஒருவழிசெய் திணைத்தாள்
என்முகம் காட்டவென் றுன்முகத்தில் இங்கே
ஓடிவந்தே னென்று கூறி யவன்
உன்நிலை இங்கில்லை அங்கே என்றான் நானோ
அங்கில்லை இங்கென ஊடறுத்தேன்

செய்வது ஏதெனச் சித்தமதில் பெரும்
சிந்தனை பல்கிப் பெருகிடவே
பொய்யுரைத்தான் மேவிப் புன்னகைத்தான் பெரும்
போதைதரும் சொல்லில் பூசித்தவன்
மெய்யுரைத்தான் மேனிசந்தணமும் நல்ல
மாமலர் தீங்கனிச் சோலைமணம்
கையசைவில் தனும்காட்டியவன் அவை
காண என் மேனியில் தென்புசெய்தான்

கையை பிடித்தவன் அன்பினிலே அந்தக்
காட்சிகளின் வசம் மூழ்கிவிட்டேன்
பெய்குளிர்செய் மழை மேக த்திலே எந்தன்
போகு வழிகண்டும் பேதலித்தேன்
வெய்யிலிலே ஒருதோற்றம்கொண்டான் பின்பு
வெண்ணிலவில் மாறி வேறுசெய்தான்
செய்கையிலே மீண்டும் ஓர்தடவை என
சுற்றும் மண்ணிலே பிறந்துவிட்டேன்

இரண்டு எனம்பெரும் சக்திவகை அங்கு
ஈர்முனையில் எனைப்பேதமிட
கண்டு கொள்ளாய் சக்தி என்றவனின்எதிர்
காணூ வகை ஒருதீயழுந்தே
சுண்டுவிரல் காட்டிச் சின்னவனே யுந்தன்
தோற்றம்  இரண்டல்ல ஒன்றே யென்றாள்
இரண்டு கண்டாய் அது நூறு என்றாள் அது
நீயல்ல நீயெனும் நானேஎன்றாள்

சொல்லித்தரச் சொல்லில் சொல்லியவன் இவன்
சொல்லிற் பிழைசெய்யின் சொல்லின்வளம்
சொல்லடுக்கும் நிலைசொல்நிறுத்தி யெந்தன்
சொல்லும் திறன்கெடச் செய்துவிடு
சொல்லுவது எந்தன் செய்கையல்ல கொடும்
சொல்லுமல்ல இவை சத்தியம் காண்
சொல்லொடுத்தே இவன்  தீமைசெய்யினுடன்
சோதியினால் மேனி சுட்டுவிடு

பெய்திடித்த மழைஓய்ந்து விட ஒரு
பேரமைதி எங்கும் தோன்றியது
மெய்சிலிர்க்க உடல் புல்லரித்தே உடல்
மேவிடும் தீஎன ஊர்ந்துசெல்ல
கையெடுத்தே உயர் வான்பரப்பை  எண்ணிக்
காத்திடும் தெய்வமே நன்றிஎன்றேன்
செய்யெடுத்தே  கவி சொல்லுவெனும் உயிர்
செல்லடுக்கில் உணர்வூறநின்றேன்

No comments:

Post a Comment